குரோசியா நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் துப்பாக்கி காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குரோஷியா நாட்டின் ஜாக்ரெப் பகுதியில் உள்ள வீட்டில் அழுகுரல் சத்தம் கேட்பதாக பக்கத்து வீட்டை சேர்ந்த நபர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்த போது 10 வயது சிறுவன் உட்பட 6 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில் அழுதுகொண்டிருந்த 2 மாத கைக்குழந்தையை பொலிஸார் பத்திரமாக மீட்டெடுத்தனர். அந்த குழந்தைகள் காயங்கள் ஏதுமின்றி இருந்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில், 36 வயதான இகோர் நாட்ஜ் என்பவரின் காரை வேகமாக பின் தொடர்ந்து சென்றுள்ளனர். உடனே காரை வேகமாக நிறுத்திய இகோர் நாட்ஜ், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டது இகோர் நாட்ஜின் முன்னாள் காதலி, அவர்களுக்கு பிறந்த 10 வயது சிறுவன், காதலியின் பெற்றோர், சகோதரி மற்றும் காதலியின் தற்போதைய காதலன் ஆகியோர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள 2 மாத கைக்குழந்தையும் இகோர் நாட்ஜின் குழந்தை என்பது பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.