சர்வதேச தடையை மீறி கிம் ஜாங் உன் செய்த பரபரப்பு செயல்: வெளிச்சத்துக்கு வந்த தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சர்வதேச அளவில் வடகொரியாவுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி கிம் ஜாங் உன் ஆடம்பர பொருட்களை கடத்தியதாக ஆய்வாளர்கள் சிலர் அம்பலப்படுத்தியுள்ளனர்.

வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் மன்றம் விதித்த சர்வதேச தடை அமுலில் உள்ளது. இருப்பினும் தமது செல்வாக்கை பயன்படுத்தி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆடம்பர பொருட்களை ரகசியமாக இறுக்குமதி செய்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த 2015 முதம் 2017 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் சுமார் 90 நாடுகளில் இருந்து வடகொரியா ஆடம்பர பொருட்களை ரகசியமாக இறக்குமதி செய்துள்ளது.

சமீபத்தில் கிம் ஜாங் உன் தாம் மிகவும் விரும்பிய மெர்சிடிஸ் மேபாக் எஸ் 600 ரக இரண்டு கார்களை மிக ரகசியமாக இறக்குமதி செய்துள்ளார்.

இந்த கார்கள் ஒன்றின் மதிப்பு 500,000 டொலர் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் இருந்து துவங்கிய பயணம் இரண்டு கண்டங்கள் வழியாக 6 நாடுகள் கடந்து வடகொரியாவில் சென்று சேர்ந்துள்ளது.

ரோட்டர்டாம் நகரில் இருந்து வடக்கு சீனாவில் உள்ள Dalian நகருக்கு முதலில் அந்த இரு கார்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மொத்தம் 41 நாட்கள் கடல் வழியாக கொண்டு செல்லப்பட்ட இந்த இரு கார்களும், துறைமுகத்திலேயே சுமார் 3 வார காலம் ரகசியமாக பாதுகாக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் 2018, ஆகஸ்டு மாதம் 26 ஆம் திகதி அங்கிருந்து ஜப்பான் நாட்டின் ஒசாகா நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒசாகாவில் இருந்து தென் கொரியாவின் பூசான் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பூசான் நகரில் இருந்து புறப்பட்ட கப்பலானது 18 நாட்கள் மாயமானதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கப்பலானது தென்கிழக்கு ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டோக் துறைமுக நகருக்கு சென்றதாக தகவல் வெளியானது.

அங்கே அந்த கார்கள் இரண்டும் இறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் திகதி வடகொரியா விமானங்கள் மூன்று விளாடிவோஸ்டோக் நகருக்கு சென்றதாகவும், கார்களுடன் வடகொரியாவுக்கு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்