ஆற்றில் மூழ்கி இறந்த இரண்டு பேரின் மரணத்துக்கு நாங்கள்தான் பொறுப்பு: எல் சால்வடார் ஜனாதிபதி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

அமெரிக்காவுக்குள் ஆற்றைக் கடந்து நுழையும் முயற்சியில் உயிரிழந்த இருவரின் மரணத்துக்கு நாங்கள்தான் பொறுப்பு என எல் சால்வடார் ஜனாதிபதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

எல் சால்வடாரைச் சேர்ந்த Óscar Martínez மற்றும் அவரது 23 மாதக் குழந்தை ஆஞ்சி வலேரியா ஆகியோர் Rio Grande ஆற்றைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

நேற்று அவர்கள் இருவரின் உடல்களும் தலைநகர் San Salvadorஇல் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டன.

இந்நிலையில் எல் சால்வடாரின் ஜனாதிபதியான Nayib Bukele, புலம்பெயர்தல் என்பது விருப்பத்தேர்வாக இருக்கலாம், அது கட்டாயப்படுத்தப்படும் ஒன்றாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

ஜூன் மாதம் 1ஆம் திகதி ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள Bukele, Óscar Martínez மற்றும் அவரது குழந்தை ஆஞ்சி வலேரியாவின் மரணம் மிகப்பெரும் துயர சம்பவம் என்றார்.

நாம் இந்த துயர சம்பவத்திற்கு யாரை வேண்டுமானாலும் குறை சொல்லலாம், ஆனால் அந்த சம்பவங்களில் நமது பங்கு என்ன?

எந்த நாட்டை விட்டு அவர்கள் ஓடினார்கள்?

அமெரிக்காவை விட்டா?

இல்லை அவர்கள் எல் சால்வடாரை விட்டு ஓடினார்கள்.

அவர்கள் நமது நாட்டை விட்டு ஓடியதால், அது நம் தவறு என்றார் அவர். அரசு அந்த உயிரிழப்புக்களை தடுக்க எதையும் செய்யவில்லை என்று கூறிய அவர், நம்மால் அவர்களுக்கு எதையும் கொடுக்க முடியவில்லை, ஒரு நல்ல வேலை, நல்ல பள்ளி என எதையும் நாம் கொடுக்கவில்லை.

ஒருவேளை அந்த குட்டிக் குழந்தைக்கு ஒரு நல்ல பள்ளி இங்கிருந்திருந்தால், அவளையும் அவளது குடும்பத்தையும் காக்கும் நல்ல மருத்துவ வசதிகள் இங்கு இருந்திருந்தால், குடிநீர் வசதியுடன் ஒரு நல்ல வீடு அவர்களுக்கு இருந்திருந்தால், அவளது பெற்றோருக்கு ஒரு நல்ல வேலை இருந்திருந்தால், அவளை வன்புணர்ந்து, அவளது குடும்பத்தை கொலை செய்யும் ஒரு கூட்டம் இல்லாத ஒரு சூழல் இங்கிருந்தால், அவர்கள் இங்கிருந்து ஓடியிருக்க மாட்டார்களே என்று வரிசையாக கேள்விகளை எழுப்பினார் அவர்.

புலம்பெயர்தல் என்பது விருப்பத்தேர்வாக இருக்கலாம், அது கட்டாயப்படுத்தப்படும் ஒன்றாக இருக்கக்கூடாது என்று கூறிய Bukele, மற்ற நாடுகளுக்கும் இந்த கோர சம்பவத்தில் பங்குண்டு என்றார்.

எல் சால்வடாரிலிருந்து அமெரிக்கா செல்ல முயலும் பலரும், தாங்கள் வறுமை, வேலை வாய்ப்பின்மை, வன்முறை போன்ற விடயங்களிலிருந்து தப்பிச் சென்று ஒரு நல்ல வாழ்வை வாழ்வதற்காகவே தப்பியோடுவதாக குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்