டிரம்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தென் கொரிய மக்கள்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தென் கொரிய மக்கள் தலைநகரான சியோலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜப்பானில் நடந்த ஜி20 மாநாட்டை முடித்த கையோடு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக, வியட்நாமில் நடந்த வடகொரிய ஜனாதிபதி கிம் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, மீண்டும் கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பு நடந்தால், ஓராண்டு காலத்தில் டிரம்ப்-கிம் சந்திப்பது மூன்றாவது முறையாக அமையும். ஆனால், திடீர் அழைப்பு என்பதால் இரு தரப்பு சந்திப்புக்கு தூதரக ரீதியிலான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் இதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

வடகொரியா மீது விதிக்கும் தடைகளை அமெரிக்க அரசு கைவிட வேண்டும் என்று கூறி, தென் கொரிய மக்கள் தலைநகர் சியோலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அவர்கள், கொரிய தீபகற்பத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்க அவர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர்.

இதற்கிடையில், கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியதை வடகொரியா வரவேற்றது. இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் சோ சன் ஹூய் கூறுகையில்,

‘இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ திட்டம் எதுவும் வரவில்லை. அப்படி ஒரு சந்திப்பு நடைபெற்றால், இரு தலைவர்கள் இடையேயான தனிப்பட்ட உறவுகள் மேலும் வலுபடவும், இருநாடுகள் இடையேயான உறவுகள் மேம்படவும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பாக அமையும்’ என குறிப்பிட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்