உயிரைப் பறிக்கும் தங்கம்.. தென் ஆப்பிரிக்காவின் கேஜிஎப் பற்றி தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான தங்கச் சுரங்கங்களில், சட்டவிரோதமாக தங்கம் எடுக்கப்பட்டு வருகிறது.

தென் ஆப்பிரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்கை சுற்றி சுமார் 6,000 கைவிடப்பட்ட தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன. ஆனால், 12 ஆண்டுகளுக்கு முன்பே தங்கச் சுரங்கங்களின் கதவுகள் அனைத்துமே அரசால் மூடப்பட்டுவிட்டன.

எனினும் சட்டவிரோதமாக மனிதர்கள் இந்த சுரங்கங்களை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். ஜிம்பாப்வே, மொசாம்பிக், போஸ்ட்வானா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பின்மையாலும், வறுமையின் காரணமாகவும் வாடும் மக்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு வருகின்றனர்.

இவர்களைத் தான் சட்டவிரோத கும்பல்கள் தங்கத்தை எடுப்பதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். இங்கு தங்கம் எடுக்கும் மனிதர்களுக்கு பெயர் சம சமாஸ். இந்த சுரங்கங்களில் ஒரு கிராம் தங்கம் எடுப்பதற்கு பல்வேறு கட்ட சோதனைகள், போராட்டங்களை இங்கு வேலை பார்ப்பவர்கள் கடந்தாக வேண்டும்.

குறிப்பாக ஆசிட் தண்ணீர், கார்பன் மோனாக்சைடு வாயு, சுரங்கப் பாம்புகள் மற்றும் உள்ளூர் கேங்ஸ்டர் கும்பல்கள் ஆகியவை அடங்கும். அத்துடன் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல், போதிய பயிற்சியும் இல்லாமல் 8 பேர் கொண்ட குழுவாக, 500 மீற்றர் ஆழத்துக்கு சென்று தங்களது பணியை இந்த மக்கள் தொடங்குகின்றனர்.

கயிற்றின் உதவியுடன் மட்டுமே சுமார் 2 மணிநேர பயணத்துக்குப் பிறகு சுரங்கப்பாதையின் எல்லைக்கு வந்தடைகிறார்கள். ரொட்டித் துண்டுகளும், தண்ணீரும் மட்டுமே இவர்களின் உணவு. 40 டிகிரி வெப்பத்தில், வெடி மருந்துகளைப் பயன்படுத்தி சில இடங்களைத் தகர்க்கிறார்கள்.

எந்த தவறு நடந்தாலும் அவர்களுக்கு அச்சுறுத்தலாக தனித் தனி குழுக்கள் துப்பாக்கிகளுடன் உள்ளனர். பல வேளைகளில் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம், அதிகபட்சம் மூன்று வாரங்கள் வரை சுரங்கப்பாதைக்குள் மக்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை உள்ளது. வெப்பம் தாங்காமல் இறந்து போனவர்களின் உடல்களை அப்படியே விட்டுவிட்டு செல்லும் சம்பவங்களும் நடப்பதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு கூலியாக இரண்டு வாரத்திற்கு 300 ராண்ட்(இந்திய மதிப்பில் 1,500 ரூபாய்), மூன்று வாரங்களுக்கு 1,000 ராண்ட்(இந்திய மதிப்பில் 5,000 ரூபாய்) கொடுக்கப்படுகிறது. இங்கு பிரித்தெடுக்கப்படும் தங்கத்தின் விலை ஒரு கிராம் 470 ராண்ட், டர்பன் போன்ற நகரங்களில் 650 ராண்ட் என இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.

மொத்த தங்கமும் பக்கத்து நாடுகளின் வழியாக துபாய்-க்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள அரசு எவ்வளவோ முயற்சித்தும், சட்டவிரோதமாக தங்கம் ஏற்றுமதியை கட்டுப்படுத்த முடியவில்லை. தங்க ஏற்றுமதில் உலகின் முதல் நாடாக இருந்த தென் ஆப்பிரிக்கா, 2007ஆம் ஆண்டுடன் தனது நிலையை இழந்தது.

இதற்கு காரணம் சட்டவிரோதமாக தங்க எடுக்கப்படுவது தான். தற்போது சீனா தான் தங்க ஏற்றுமதியில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு 4.8 மில்லியன் தங்கத்தை குட்டி நாடான கானா ஏற்றுமதி செய்தபோது, தென் ஆப்பிரிக்கா 4.2 மில்லியன் அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers