நைல் நதியில் கொத்துக் கொத்தாக சடலங்கள்... ராணுவம் கொலைவெறித் தாக்குதல்: சூடானில் பதற்றம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சூடான் நாட்டில் ஜனநாயகத்தை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தின்போது அந்த நாட்டு ராணுவம் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 என அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் நைல் நதியில் இருந்து 40 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூட்டமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

சூடானில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்துவந்த அதிபர் ஒமர் அல்-பஷீருக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, அவரது ஆட்சியை ராணுவம் கடந்த ஏப்ரல் மாதம் அகற்றியது. பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னதாக,

சூடானில் ஜனநாயக ஆட்சி முறையை 3 ஆண்டுகளில் படிப்படியாகக் கொண்டு வருவதாக அல்-பஷீர் அறிவித்திருந்தார்.

இருப்பினும், புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராணுவ கவுன்சில், இன்னும் 9 மாதங்களுக்குள் தேர்தலை நடத்தவிருப்பதாக அறிவித்தது.

இதனை ஏற்காத ஜனநாய ஆதரவு அமைப்பினர், சூடான் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாள்களில் ராணுவ அடக்குமுறையில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நைல் நதியில் இருந்து 40 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 100 என அதிகரித்துள்ளது.

இந்த வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது, தலைநகர் கார்டூமிலுள்ள முக்கிய பகுதிகளில் கூடிய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், கற்களைக் கொண்டு சாலையில் தடையை ஏற்படுத்தினர்.

அவர்களைக் கலைக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தும் சப்தம் கேட்டதாக அங்கிருந்த ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

போராட்டக்காரர்களின் உயிரிழப்புக்கு, ஆளும் ராணுவ கவுன்சிலின் ஆயுதப் படைப் பிரிவுதான் காரணம் என்று போராட்டக்குழு தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்