இலங்கை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஜப்பான் பெண்மணி: தனி விமானத்தில் கொண்டுசெல்லப்பட்ட சடலம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இலங்கை தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட ஜப்பான் பெண்மணியின் உடல் சொந்த நாட்டிற்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ஜப்பான் வெளிவிவகார அமைச்சகம் உறுதி செய்ததுடன், இலங்கை தாக்குதலில் மேலும் நான்கு ஜப்பானியர்கள் காயங்களுடன் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தின தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஜப்பானியரின் உடல் வியாழனன்று பகல் சொந்த நாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

டோக்கியோ அருகே அமைந்துள்ள நரிதா விமான நிலையத்தில் அரசு உயரதிகாரிகள் அந்த பெண்மணியின் உடலுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தியுள்ளனர்.

மேலும் அவரது சவப்பெட்டியானது நீல வண்ண போர்வையால் மூடப்பட்டு அதன்மீது வெள்ளைப் பூக்கள் கொண்ட பூச்செண்டு ஒன்றையும் வைத்திருந்தனர்.

இலங்கையில் கொல்லப்பட்ட பெண்மணி தொடர்பில் ஜப்பான் ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், அவரது பெயர் Kaori Takahashi எனவும், தமது குடும்பத்தாருடன் ஷாங்கரி லா ஹொட்டலில் காலை உணவு அருந்திக் கொண்டிருந்த வேளையில் குண்டு வெடித்ததாகவும்,

இதில் சம்பவயிடத்திலேயே Kaori Takahashi கொல்லப்பட்டதாகவும், அவரது கணவரும் மகளும் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.

பாதுகாப்பு காரணங்களால், குறித்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர் மற்றும் காயமடைந்தவர்களின் புகைப்படங்களை ஜப்பான் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட மறுத்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று முன்னெடுக்கப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்