நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல்! 24 மணிநேரத்தில் 15 லட்சம் வீடியோக்களை நீக்கிய பேஸ்புக்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான, 15 லட்சம் நேரலை வீடியோக்களை 24 மணிநேரத்தில் பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் 50 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதி பிரெண்டன் டாரண்ட், ஒன்லைன் விளையாட்டுகளில் வருவதைப் போல் துப்பாக்கியால் மக்களை கொன்று குவித்த வீடியோவினை நேரலையாக வெளியிட்டிருந்தான். இதனைக் கண்ட உலகின் பல்வேறு நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வீடியோவின் எவ்வித பகிர்வும் சட்டத்திற்கு எதிரான மிகப்பெரிய வன்முறை என்றும், அதனை பேஸ்புக் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசினா ஆர்டர்ன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்கள் நீக்கப்பட்டன. இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் நியூசிலாந்து செய்தி தொடர்பாளர் மியா கார்லிக் கூறுகையில்,

‘இந்த வீடியோ, இணையப்பக்கத்தில் பகிரப்படுவதை தடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கென தனியாக ஒரு குழு, சிறந்த தொழில்நுட்பத்துடன் முழுவதும் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் 1.5 மில்லியன் (15 லட்சம்) வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் பேஸ்புக் ஊழியர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...