வெளிநாட்டில் தன்னம்பிக்கையால் மீண்ட தமிழ் பெண்! திருமண ஆசை, காதலன் என பல கனவுகளுடன் இருப்பதாக உருக்கம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பட்டுப்புடவை, அலங்காரம், நெற்றிச்சூடி, ஆரம் நெக்லஸ் என நகைகள் அணிந்து முகத்தில் நாணச் சிரிப்புடன் புகைப்படத்தில் மணப்பெண் இருப்பார். இந்த மணப்பெண்ணும் இதுபோன்ற எல்லா அலங்காரங்களுடன் காணப்பட்டாலும் தலையலங்காரம் மட்டும்தான் இல்லை.

நாணச் சிரிப்புக்கு பதிலாக தன்னம்பிக்கையுடன் கூடிய புன்னகை, கை கால்களில் மருதாணி சிவப்பு, உதட்டில் லிப்ஸ்டிக் சிவப்பு, செந்நிறப் புடவை என அழகாக தோற்றமளித்தாலும், தலையில் முடி இல்லாதது ஒரு குறையாக தெரிகிறதா?

இந்த மணப்பெண்ணின் தலையில் மட்டும் மலர்கள் இல்லை என நினைக்கவேண்டாம், இந்தப் பெண் கடந்து வந்த பாதையும் மலர்ப்பாதை அல்ல.

வைஷ்ணவி பூவேந்திரன் பிள்ளை என்ற இந்த தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் வசிப்பது மலேசியாவில். நவி இந்திரன் பிள்ளை என்ற பெயரில் இன்ஸ்ட்ராகிராம் கணக்கு வைத்திருக்கும் இந்தப் பெண்ணின் புகைப்படங்கள், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பாராட்டுக்களை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கின்றன.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வைஷ்ணவி, சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக முதுகெலும்பு புற்றுநோய் தாக்க, அதற்கான சிகிச்சைப் பெற்று மீண்டு வந்திருக்கிறார். அவரது நோயை மட்டும் களைந்த கீமோதெரபி சிகிச்சை, முடியையும் விட்டு வைக்கவில்லை.

திருமணத்தில் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பது அனைவரின் உள்ளார்ந்த விருப்பமாக இருக்கும். அதற்காக உலகில் உள்ள அனைவருமே மெனக்கெடுவார்கள். ஆனால் புற்றுநோய் போன்ற கடுமையான நோய் தீவிரமாக தாக்கும்போது இயல்பான ஆசைகள் அனைத்தும் வடிந்து உற்சாகம் இழந்துவிடுவார்கள்.

அதிலும் அழகாக இருக்கவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தும் பெண்கள் நோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தாலும், அதன் தாக்கத்தில் இருந்தும் மனசோர்வில் இருந்தும் மீண்டு வந்து உற்சாகமாக இருப்பது ஆச்சரியம் அளிக்கும் விஷயம். ஆனால், தற்போது நவி பிள்ளையின் தன்னம்பிக்கை, அனைவருக்கும் உற்சாகமளிக்கும் உந்துசக்தியாக மாறிவிட்டது.

நவியின் மார்பகங்கள் அகற்றப்பட்டு விட்டன. கீமோதெரபியால் தலைமுடி கொட்டிப்போக, உடல் பொலிவிழந்துவிட்டது. இதை ஏற்றுக் கொள்வது இளம் பெண்ணான நவிக்கு மிகவும் மன உளைச்சலைத் தந்தது. ஆனால் தனது துக்கத்தில் இருந்து வெளியேறி, இன்று உலகிற்கே தன்னம்பிக்கை நட்சத்திரமாய் மிளிர்கிறார் வைஷ்ணவி பூபேந்திரன்.

மணப்பெண் அலங்காரத்தில் முகம் நிறைய சிரிப்பும், மனம் நிறைய தன்னம்பிக்கைத் ததும்ப திருமணத்திற்கான போட்டோஷூட் எடுத்திருக்கிறார் நவி. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்ட்ராகாம் பக்கத்தில் பதிவிட்டார். இந்தப் புகைப்படங்களில் தனது முடியில்லா தலையை மறைக்க அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை. தலையில் மெல்லியத் துணியை மூடியிருப்பதுபோல் சில புகைப்படங்களில் தென்பட்டாலும், அவையும் தலையில் முடி இல்லாததை தெளிவாக காட்டுகின்றன.

நவியின் முகத்தில் வருத்தமோ சோகமோ காணப்படவில்லை என்பதுதான் இந்தப் புகைப்படங்களின் சிறப்பு. அதற்கு பதிலாக மலர்ந்த புன்சிரிப்பும், தன்னுடைய கனவு நனவான மகிழ்ச்சியும்தான் தென்படுகிறது.

புகைப்படங்களுடன் அவர் பதிவிட்டிருக்கும் வாசகங்கள் அனைவருக்கும் ஊக்கம் கொடுப்பதாக இருக்கின்றன.

நவியிடம் பிபிசி செய்தியாளர் சிந்துவாசினி தொடர்பு கொண்டு பேசினார். நவியின் பார்வையில் இருந்து அவரது வாழ்க்கையை தெரிந்து கொள்வோம்:

இந்தியாவில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நான், குடும்பத்துடன் மலேசியாவில் வசிக்கிறேன். அம்மா, அப்பா, அக்கா என்ற சிறு குடும்பம். எனக்கு 28 வயதாகிறது. எஞ்சினியரிங் படித்துவிட்டு, சில ஆண்டுகள் பணிபுரிந்தேன்.

பரதநாட்டியமும், கர்நாடக இசையும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. நன்றாக சமைப்பேன். ஊர் சுற்ற மிகவும் பிடிக்கும், நண்பர்களும் அதிகம். அது மட்டுமா? அலங்காரம் செய்து கொள்வதும், நன்றாக உடுத்துவதிலும் ஆர்வம் அதிகம்.

எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக 2013ஆம் ஆண்டு தெரியவந்தது. உண்மையில் அப்போது நான் மிகவும் உடைந்து போய்விட்டேன். அதுவரை வாழ்க்கையை விளையாட்டாகவே எடுத்துக் கொண்டிருந்தேன். புற்றுநோய் ஏற்பட்டதும் வாழ்க்கையே மாறிவிட்டது. ஆனால் எப்படியும் மீண்டுவிடுவேன் என்ற நம்பிக்கையை மட்டும் நான் கைவிடவில்லை.

சில ஆண்டுகள் சிகிச்சைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினேன். ஆனால் 2018ஆம் ஆண்டு முதுகெலும்பிலும் கல்லீரலிலும் புற்றுநோய் தாக்கியது. என் மனவுறுதியை குலைத்த நோய், வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளியது.

புற்றுநோய் உடலை மட்டுமல்ல, மனதையும் அரித்து கவலைகளையும் அச்சத்தையும் கூடுதலாகத் தரும். நோய் பாதிப்பது நோயாளியை மட்டுமா? அதன் தாக்கம் முழுக் குடும்பத்தையுமே பாதிக்கிறது. என் குடும்பம் முழுவதுமே நிலை குலைந்து போனது. எனது வேதனைகளைப் பார்த்து, குடும்பத்தினர் பட்ட துயரம் இருக்கிறதே? அதை வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியுமா? மலேசியாவில், அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு வசதிகள் இல்லாததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். எனவே பொருளாதாரச் சிக்கல்களும் எழுந்தன.

புற்றுநோயால் உடலுக்கும், மனதுக்குமான இணக்கத்தன்மை சீர்கெடுகிறது. இதுவரை 16 முறை கீமோதெரபி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு, எதிர்மறை சிந்தனைகளால் ஆக்ரமிக்கப்பட்டேன். குடும்பத்தினரும், சில நண்பர்களும் ஆறுதலாக துணை நின்றாலும், உலகத்தில் இருந்து தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தேன். புற்றுநோய் மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்களைப் பற்றி பேச மலேசியாவில் தயக்கமும், வெட்கமும் இருப்பதால், எனக்கு ஏற்பட்ட நோயைப் பற்றி வேறு யாருக்கும் சொல்லவில்லை.

என்னுடைய நோயைப் பற்றி வெளியே தெரிந்தால், உலகத்தில் இருந்து நான் தனிமைப்படுத்தப்படுவேன், ஆண்கள் விலகுவார்கள், திருமணத்தில் பிரச்சனை ஏற்படும் என்று பெற்றோர் பயந்தார்கள்.

ஆனால், நான் இன்ஸ்ட்ராகிராமில் என்னுடைய புற்றுநோய் பற்றி பதிவிட்டேன். பலரிடமிருந்து ஆக்கப்பூர்வமான எதிர்வினைகள் வந்ததைப் பார்த்து எனது நம்பிக்கை அதிகரித்தது.

ஒருநாள் நெட்ஃபிலிக்ஸில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, மணப்பெண்ணாக போட்டோஷுட் ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் திடீர் என்று தோன்றியது. யாரும் என்னை காதலிப்பார்களா, எனக்கு காதலன் கிடைப்பான, திருமணம் நடக்குமா? என்று எனக்கு தெரியாது. ஆனால் மணப்பெண் அலங்காரத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள விரும்பினேன்.

உடனே, புகைப்படக் கலைஞர், ஒப்பனைக் கலைஞர்களை தொடர்பு கொண்டு ஆலோசித்தேன். அவர்கள் எனக்கு உற்சாகமளித்தார்கள். அப்போதுகூட எனது புகைப்படங்கள் இவ்வளவு பிரபலமாகும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் நிறைய பெண்கள் என்னுடைய புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதேபோல் நடந்துவிட்டது.

இன்ஸ்ட்ராகிராமில் புகைப்படம் வெளியிட்ட பிறகு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் எனக்கு செய்தி அனுப்பினார்கள். அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் உந்துசக்தியாய் இருப்பதாக சொன்னார்கள். அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

"உண்மையில் அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தை பொறுத்தது" என புத்தகங்களில் படித்திருக்கிறேன்; அதை நிதர்சனமாக இன்று உணர்கிறேன். அழகாக இருப்பதாக நாம் உணர்ந்தால், உண்மையில் அழகாக இருப்போம் என்பதை புரிந்துக் கொண்டேன். அழகு என்பது, நம்மை நாமே நேசிப்பது என்பதும், தன்னம்பிக்கையாக இருப்பதுதான் என்றும் புரிந்துக் கொண்டேன்.

மணப்பெண்ணாக அலங்கரித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாலும் நான் தனியாகத்தான் இருக்கிறேன். நான் முதலில் ஒருவரை காதலித்தேன், பிறகு சில காரணங்களால் பிரிந்துவிட்டோம். எங்கள் பிரிவுக்கு காரணம் புற்றுநோய் இல்லை என்பதை குறிப்பாக சொல்ல விரும்புகிறேன். இன்றும் என் காதலனை மிகவும் காதலிக்கிறேன். எனக்கான காதல் ஒருநாள் என்னைத் தேடி வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இன்ஸ்ட்ராகிராமில் மணப்பெண் அலங்காரத்தில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கும் நவி, அத்துடன் எழுதியிருக்கும் இந்த வரிகள், புகைப்படத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன.

புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது நம் வாழ்வில் பல தாக்கங்களை விட்டுச் செல்கிறது, அழகை அழித்துவிடுகிறது, தன்னம்பிக்கையை வேரோடு சாய்த்து விடுகிறது. சிறுமியாக இருக்கும்போது, திருமணத்தைப் பற்றிய பல கனவுகள் கண்டிருப்போம். ஆனால் புற்றுநோய் அவற்றை அரித்து செல்லாததாக்கி விடுகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் திருமணத்தை மறந்துவிட வேண்டியிருக்கிறது. ஒன்று அவர்களே மறுப்பார்கள், அல்லது மற்றவர்கள் நிராகரிப்பார்கள்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நான், என் முன்னால் காதலரை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். மணப்பெண்ணாகும் கனவுகள் வருகின்றன. கீமோதெரபி எடுத்துக் கொண்டபோது, எனது முடி கொட்டியது தான் எனக்கு மிகுந்த துக்கத்தைத் தந்தது.

என்னுடைய அழகு உதிர்ந்துவிட்டது என்றும், இனி யாருக்கும் என்னை பிடிக்காது என்றும் நினைத்தேன். அதன்பிறகு நான் மணப்பெண்ணாகவே முடியாது, அப்படி கனவு காண்பதற்கான அழகை என்னால் பெற முடியாது என்று நம்பினேன்.

தலைமுடி நமது அழகை அதிகரிக்கிறது என்று நினைக்கிறோம். அதை இழந்தது என்னுடைய தன்னம்பிக்கையை அழித்தது. வருத்தமாக இருந்தாலும், ஏதோ ஒரு கட்டத்தில் அதிலிருந்து வெளியே வர விரும்பினேன். எதிர்காலம் எப்படி இருந்தாலும் அதை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிவு செய்தேன். இதோ பாருங்கள் உங்கள் முன்னர், துணிச்சலான ஒரு மணப்பெண்.

- BBC - Tamil

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்