வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 70 பேர் உடல் கருகி பலியாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேச தலைநகர் டாக்காவில் சவுக்பஜார் பகுதியில் உள்ள வேதிப்பொருள்கள் சேமிப்பு கிடங்கில் நேற்று இரவு 10 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அடுத்த சில நிமிடங்களில் இதன் வேகம் அதிகரித்து அருகாமையில் உள்ளை அடுக்குமாடி குடியிருப்பிற்கு பரவ ஆரம்பித்துள்ளது.
அதோடு அல்லாமல் அப்பகுதியில் உள்ள மிகவும் சிறிதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், விபத்திலிருந்து தப்ப முடியாமல் பொதுமக்கள் சிக்கியுள்ளனர்.
இதற்கிடையில் சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து முடித்தனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை 70 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் சிவில் பாதுகாப்பு அதிகாரி மஹ்ஃபுஸ் ரிவென்ன் தெரிவித்துள்ளார்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இறந்தவர்களை அடையாளம் கண்டறிய முடியாததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.