கொத்துக் கொத்தாக கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்: வெளிவரும் பகீர் கரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சமீப காலமாக உலகின் பல்வேறு பகுதிகளில் கொத்துக் கொத்தாக திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதற்கு என்ன காரணம் என ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கும் திமிங்கலங்கள் திடீரென்று சமீப காலமாக உலகின் பல்வேறு கடற்கரைகளில் கரை ஒதுங்குவது அதிகரித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள், கப்பல்களில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த சோனார் கருவிகளாக இருக்கலாம் என தெரிவிக்கின்றன.

கடலில் மாசு அதிகமாகக் காணப்படுவது, வேட்டை, காலநிலை மாற்றம் எனப் பல காரணங்கள் திமிங்கலம் கரை ஒதுங்குவதற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்களால் முன்னால் கூறப்பட்டது.

தற்பொழுது தி ராயல் சொஸைட்டியின் அறிவியல் பத்திரிகைக்கு 21 நிபுணர்கள் இது தொடர்பான ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

அதில் சோனார் ஒரு கடல்வாழ் உயிரினத்தில் எந்த வித பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

கடலில் எதிரில் இருக்கும் பொருள்களின் தொலைவைக் கண்டறிய சோனார் மிக நீண்ட காலமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒலியைப் பரப்பி அது எதிரில் இருக்கும் பொருளில் பட்டுத் திரும்பும் நேரம் போன்ற காரணிகளை வைத்து இது இயங்குகிறது.

இவை இயங்கும் போது சிறிய அளவிலான ஒலி அந்தக் கருவியில் இருந்து வெளிப்படுகிறது. இதுதான் திமிங்கிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதன் காரணமாக ஆழ்கடல் வீரர்களுக்கு ஏற்படும் சீர்குலைவு நோய் (decompression sickness) போன்ற நிலை திமிங்கிலங்களுக்கும் ஏற்படுகிறது.

இது நிகழும் போது ரத்த நாளங்களில் நைட்ரஜன் வாயு குமிழ்கள் நிரம்புகின்றன. மூளையின் இயக்கங்களில் குழப்பம் ஏற்படுகிறது.

அதன் காரணமாக மற்ற உறுப்புகளும் பாதிப்படைகின்றன. இந்த நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதால் இறுதியாக இறக்கும் நிலைக்கு திமிங்கிலங்கள் தள்ளப்படுகின்றன.

இப்படி கூட்டம் கூட்டமாக இறக்கும் திமிங்கிலங்கள்தான் இறுதியாகக் கரையில் வந்து ஒதுங்குகின்றன என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்