ஆபரேஷன் டேபிளிலேயே தூங்கிய மருத்துவர்: வைரலான புகைப்படம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தொடர்ந்து ஆறு ஆபரேஷன்களை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர் ஒருவர், கடைசி ஆபரேஷனை முடித்ததும் ஆபரேஷன் டேபிளிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார், ஆனாலும் அவரது கடமையில் தவறவில்லை.

சீன மருத்துவரான Luo Shanpeng தொடர்ந்து ஓய்வின்றி 20 மணி நேரம் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதற்காக வெகுவாக பாராட்டப்பட்டாலும், தனது கடைசி அறுவை சிகிச்சைக்குப்பின் அவர் ஆபரேஷன் டேபிளிலேயே தூங்கும் புகைப்படம் முன்னை விட அவரை அதிக பிரபலமாக்கிவிட்டது.

Shanpeng புலம்பெயர்ந்த நோயாளி ஒருவரின் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் ஒட்டவைத்துவிட்டு, அந்த ஆபரேஷன் டேபிளிலேயே சாய்ந்து தூங்குவதை அந்த படம் காட்டுகிறது.

அவர் தூங்கினாலும் அவர் ஒட்டவைத்த கையை பிடித்தவாறே துங்குகிறார். அந்த புகைப்படம் சீனாவின் பிரபல சமூக ஊடகம் ஒன்றில் வெளியான நிலையில், சட்டென வைரலானது.

அன்று அவர் அதற்குமுன் ஐந்து அறுவை சிகிச்சைகளைச் செய்து முடித்திருக்கிறார், ஆறாவது அறுவை சிகிச்சை எட்டு மணி நேரம் நீடித்திருக்கிறது.

ஐந்து அறுவை சிகிச்சைகளை முடித்தபிறகு, மாமிசம் வெட்டும் கத்தியில் சிக்கி, கை துண்டான ஒருவரை சிலர் தூக்கிக் கொண்டு வர, களைத்துப்போனாலும், களைப்பையும் மீறி பொறுப்புணர்வோடு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருக்கிறார் Shanpeng.

அந்த நோயாளிக்கு அப்போது அறுவை சிகிச்சை செய்யாதிருந்தால், அவர் தனது கையை இழக்க நேரிட்டிருக்கும் என்கிறார் Shanpeng.

அவர் தூங்கும் படத்தைக் காட்டி அதைக் குறித்துக் கேட்டால், சற்று ஓய்வெடுப்பதற்காக கண்களை மூடினேன், ஆனால் தூங்கிவிடுவேன் என்று நினைக்கவில்லை என்கிறார்.

20 மணி நேரம் தொடர்ந்து ஓய்வின்றி அறுவை சிகிச்சைகள் செய்ததாக தெரிவிக்கும் Shanpeng, அந்த நோயாளியின் கையில் போடப்பட்ட கட்டு காய்வதற்குமுன், அவர் கையை கீழே வைத்து விடக்கூடாது என்பதற்காகவே அவரது கையைப் பிடித்துக் கொண்டே இருந்ததாக தெரிவிக்கிறார்.

அதுமட்டுமின்றி நோயாளியின் கையில் சரியான இரத்த ஓட்டம் நடப்பதற்கும் இது அவசியம் என்கிறார் Shanpeng.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers