அவர்கள் அபாயகரமானவர்கள்! செண்டினல் தீவுவாசிகள் குறித்து அதிர்ச்சி தகவலை கூறிய அதிகாரி

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

செண்டினல் தீவைச் சேர்ந்த பூர்வகுடி பழங்குடியினர்கள் மிகவும் அபாயகரமானவர்கள் என்றும், அவர்கள் தங்களை தாக்கினார்கள் என்றும் இந்திய கடற்படை அதிகாரி தனது அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் ஜாவ் என்ற இளைஞர், அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவுக்கு சாகசப் பயணம் மேற்கொண்டபோது அங்கிருந்த பூர்வகுடி மக்களால் கொல்லட்டார்.

இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செண்டினல் தீவு பழங்குடியினர் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதால் ஜான் ஆலனின் உடலை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில், அந்த பூர்வகுடிகளைப் பற்றிய அதிர்ச்சி தகவலை, இந்திய கடலோரக் காவற்படை அதிகாரி பிரவீன் கவுர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாக என்.டி.டிவி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில்,

‘கடந்த 2006ஆம் ஆண்டு அந்தமான் போர்ட் பிளேயரை சேர்ந்த இரண்டு மீனவர்களைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் நாங்கள் இறங்கினோம். பல்வேறு பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று தேடிய நாங்கள், வடக்கு செண்டினல் தீவின் அருகில் ஒரு படகைக் கண்டோம்.

அது அந்த மீனவர்களின் படகாக இருக்கலாம் என்று ஹெலிகாப்டரை அந்த கடற்கரையில் தரையிறக்க முடிவு செய்தோம். அப்போது திடீரென்று செண்டினல் பூர்வகுடிகள், சுமார் 50 பேர் அங்கு கூடிவிட்டனர்.

அவர்கள் கையில் வில், அம்பு மற்றும் ஈட்டிகள் இருந்தன. அவர்களில் பெண்கள் யாரும் இல்லை. சிவப்பு நிறத்தில் இடுப்பில் ஆடை அணிந்திருந்தனர். ஹெலிகாப்டர் கீழே இறங்குவதை கண்ட அவர்கள், எங்களை நோக்கி குறிபார்த்து அம்புகளை எய்தனர்.

அவை 100 மீற்றர் தூரம் வரை பாய்ந்து வந்தன. அதற்கு மேல் வரவில்லை. இதனைத் தொடர்ந்து, உடனடியாக எங்கள் திட்டத்தை மாற்றினோம். ஹெலிகாப்டரை வேகமாகத் திருப்பி மேற்கு நோக்கி சென்றோம். அதை விரட்டிக் கொண்டு அவர்கள் பின் தொடர்ந்தனர். சில கிலோ மீற்றர் தூரம் சென்றதும் வேகமாக ஹெலிகாப்டரை திருப்பி, கடற்கரை அருகே வந்து விட்டோம்.

உடனடியாக எங்கள் வீரர் கீழே இறங்கி படகை பார்த்தார். அதில் ஒரு உடல் கிடந்தது. கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொல்லப்பட்டு கிடந்தது அந்த உடல். அருகில் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதில் இன்னொரு உடல் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து அதை தோண்ட சொன்னோம்.

எங்கள் வீரர் தோண்டினார். அதில் உடல் புதைக்கப்பட்டிருந்தது. அதற்குள் கடற்கரைக்கு திரும்பிய பழங்குடியினர், எங்களை தாக்கத் தொடங்கினர். உடனடியாக நாங்கள் ஒரு உடலுடன் திரும்பி விட்டோம். அந்த உடலை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம்.

பிறகு மற்ற உடலை எடுக்க சென்றோம். முதலில் நாங்கள் செய்த ட்ரிக்கை பூர்வகுடிகள் தெரிந்து கொண்டார்கள். இதனால் அவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்தார்கள். ஒரு பகுதியினர் எங்கள் ஹெலிகாப்டரை நோக்கி ஓடி வந்தனர். மற்றொரு பிரிவினர் படகில் உட்கார்ந்து கொண்டனர்.

இதனால் எங்களால் ஹெலிகாப்டரை கீழே இறக்க முடியவில்லை. எங்கள் கையில் மெஷின் துப்பாக்கி இருந்தது. இருந்தாலும் திரும்பி விட்டோம். அவர்கள் அபாயகரமானவர்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்