கோடிக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவு நாள்: உலக நாடுகள் மவுன அஞ்சலி

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

முதல் உலகப் போர் முடிவடைந்து நூறு ஆண்டுகள் ஆகிய நிலையில், உலகம் முழுவதும் மரணமடைந்த கோடிக்கணக்கான வீரர்களுக்கு அவர்களது நாட்டு மக்கள் மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த 1914 முதல் 1918ஆம் ஆண்டு வரை முதல் உலகப் போர் நடந்தது. கோடிக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் இந்த போரில் கொல்லப்பட்டனர்.

உலகில் உள்ள பல நாடுகள் இந்த போரில் பங்கேற்ற போதிலும், பெரும்பாலும் இந்தப் போர் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது.

பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒருபுறமும் ஜேர்மனி, இத்தாலி, ஹங்கேரி, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் மறுபக்கமும் நின்று போரிட்டன.

இந்த போரில் சுமார் 7 கோடி பேர் ஈடுபட்ட நிலையில், போர் நடந்து முடிந்தபோது பொதுமக்கள், வீரர்கள் என சுமார் 2 கோடி பேர் மரணமடைந்ததாகவும், படுகாயமடைந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிய வந்தது.

உலகையே உலுக்கிய இந்த போரானது இதே நாளில் 1918ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. இதனால் இன்றைய தினம் முதல் உலகப் போர் நூற்றாண்டு என்பதால், உலகின் பல நாடுகள் இன்று மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றன.

கடந்த 1995ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய மக்கள் இந்த நாளில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது.

இந்த ஆண்டு போர் முடிந்து நூறாவது ஆண்டு என்பதால், அதனை நினைவு கூரும் வகையில் தலைநகர் லண்டனில் உள்ள மரணமடைந்தவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

’பாப்பி’ மலர்களை சமர்ப்பணம் செய்து அஞ்சலி செலுத்தப்படுவதால், இந்நிகழ்வு ‘பாப்பி அஞ்சலி’ என்று அழைக்கப்படுகிறது.

பிரித்தானியாவைப் போலவேஅவுஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் உள்ள போர் நினைவு சின்னத்தில், மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், அடிலெய்டு நகரில் விமானம் மூலமாக காகிதத்தால் ஆன சிவப்பு நிற பாப்பி மலர்கள் தூவப்பட்டன.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் மிகப்பெரிய இரங்கல் கூட்டம் நிகழ்ச்சியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்று ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இவை தவிர பிற உலக நாடுகளிலும், முதல் உலகப் போரில் பங்கேற்று மரணித்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்