பெண்ணுறுப்பு சிதைவுக்குட்படும் ஆப்பிரிக்க சிறுமிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது: ஒரு மகிழ்ச்சியான செய்தி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

FGM எனப்படும் பெண்ணுறுப்பு சிதைவுக்குட்படும் ஆப்பிரிக்க சிறுமிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

BMJ Global Health என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவில், பெண்ணுறுப்பு சிதைவுக்குட்படும் ஆப்பிரிக்க சிறுமிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க மற்றும் பெரிய அளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாடுகளில் இந்த வழக்கம் ஒரு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டாலும் அது ஒரு மனிதத்தன்மையற்ற செயல் என மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன.

பெண்ணுறுப்புச் சிதைக்கப்படுவதால் பல சிறுமிகள் இரத்தம் வெளியேறியோ அல்லது நோய்த்தொற்று ஏற்பட்டோ உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

மேலும் தாங்க இயலா வலி, குழந்தையின்மை, மாதவிடாய் பிரச்சினைகள், சில நேரங்களில் பிரசவிக்கும்போது உயிரிழக்கும் அபாயம் வரை பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஏராளமான பணத்தை செலவிட்டுள்ளதோடு, தாய்மார்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் பலனாகவே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டிலிருந்து, 29 நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பெண்ணுறுப்பு சிதைவுக்குட்படும் ஆப்பிரிக்க சிறுமிகளின் எண்ணிக்கை பெருமளவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அங்கு 1995இல் 71 சதவிகிதமாக இருந்த பாதிக்கப்படும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை, 2016இல் 8 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கென்யா மற்றும் டான்சானியாவில் 3 முதல் 10 சதவிகிதமாக இருந்த பாதிக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை முற்றிலுமாக ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது.

வட ஆப்பிரிக்காவில் 1990இல் 60 சதவிகிதமாக இருந்த பாதிக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை 2015இல் 14 சதவிகிதமாக குறைந்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண முடிகிறது. அங்கு 1996இல் 74 சதவிகிதமாக இருந்த பாதிக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை 2017இல் 25 சதவிகிதமாக குறைந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்