நடுக்கடலில் உயிர் தப்பியது எப்படி? கடற்படை அதிகாரியின் திக் திக் நிமிடங்கள்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சர்வதேச படகுப் போட்டியின் போது படகு சேதமடைந்ததால் நடுக்கடலில் மாட்டிக்கொண்ட இந்திய கடற்படை அதிகாரி, தான் தப்பியது எப்படி என விளக்கம் அளித்துள்ளார்.

பிரான்சில் கடந்த ஜூலை 1ஆம் திகதி ‘கோல்டன் குளோப்’ எனும் உலகை கடல் வழியாக சுற்றிவரும் சர்வதேசப் படகுப் போட்டி துவங்கியது. சுமார் 30 ஆயிரம் மைல் தூரத்தை தனி நபராக படகில் கடந்து வர வேண்டும் என்பதே இந்த போட்டியின் விதியாகும்.

பாய்மர படகுகளை மட்டுமே பயன்படுத்தக் கூடிய இந்தப் போட்டியில், இந்தியாவின் சார்பில் கடற்படையைச் சேர்ந்த அதிகாரியான அபிலாஷ் டோமி(39) கலந்துகொண்டார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், 84 நாட்களில் 10,500 மைல் கடந்து போட்டியில் 3வது இடத்தில் இருந்தார். அபிலாஷ் அவுஸ்திரேலியாவின் பெர்த் அருகே தென் இந்தியப் பெருங்கடலில் பயணித்தபோது, திடீரென 14 அடி உயரத்திற்கும் மேல் அலைகள் எழுந்ததால் அவருடைய படகு சேதமடைந்தது.

இதனால் படுகாயமடைந்த அவர் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின்னர், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய போர்க்கப்பலும், விமானமும் மீட்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அத்துடன் அவுஸ்திரேலிய கடற்படையும், பிரெஞ்ச் கப்பலான ஓஸ்ரிஸும் அவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதற்கிடையில் குடிக்க தண்ணீர் கிடைக்காததால், அபிலாஷ் கடல் தண்ணீரை குடிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் அபிலாஷ் பத்திரமாக மீட்கப்பட்டார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, நியூ ஆம்ஸ்டர்டம் தீவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தான் நடுக்கடலில் தப்பித்தது எப்படி என அபிலாஷ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘கடல், நம்ப முடியாத அளவுக்கு கடுமையாக மாறிவிட்டது. நானும் எனது துரியா படகும் இயற்கைக்கு எதிராக போராடினோம்.

கடலில் பயணம் செய்த அனுபவம் மற்றும் கடற்படையில் நான் பெற்ற பயிற்சியின் காரணமாகவே உயிர்தப்பினேன். இல்லை என்றால் கடினம். என்னை மீட்க உதவிய அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

PTI

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்