இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: படகில் அடித்து பிடித்து ஏறும் சுற்றுலாப்பயணிகள் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அங்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அப்பகுதியை விட்டு, வெளியேறி வருகின்றனர்.

இந்தோனேஷியாவின் Lombok பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக 16 பேர் பலியாகியிருந்த நிலையில், நேற்று திடீரென்று மீண்டும் பாலி, லாம்பாக் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியிருப்பதாகவும், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், 200-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் மின்சார பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு சுற்றுலாப்பயணிகளாக சென்றிருந்த 10,000-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியை விட்டு வெளியேற முயன்றுவருவதாகவும், இதற்காக அவர்கள் அங்கிருக்கும் கடற்கரையில் காத்திருந்து, படகில் அடித்து பிடித்து ஏறுவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக வடக்கு லாம்பாக் பகுதி 80 சதவீதம் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவும், இடிபாடுகளுக்கிடையில் இருப்பவர்கள் ஹெலிகாப்டர் போன்றவை எல்லாம் பயன்படுத்தி மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல பாடகரான Gary Barlow தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தோனிசியாவின் பலி பகுதியில் இருக்கும் பிரித்தானியா குடும்பத்தினர் ஏராளமானோர் வெளியேறி வருவதாகவும், நிலநடுக்கத்தினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் இரண்டு முறை இந்தோனிசியாவில் இது போன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் இதுக்கும் மேல் இருந்தால் ஆபத்து என்பதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்