கருப்பின மக்களுக்கு நில விநியோகம்: அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் தென் ஆப்பிரிக்கா

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் நில உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடு ஏதும் தராமல், நிலங்களை கையகப்படுத்தும் அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ராமபோசா தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்காவில் நில சீர்திருத்த நடவடிக்கை மந்தமாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

நாட்டில் சிறுபான்மை வெள்ளையின மக்களிடம் ஏராளமான நிலங்கள் குவிந்துள்ளதாகவும், சில ஆயிரம் வெள்ளையின வணிக ரீதியான விவசாயிகளிடம் வளமான நிலங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கருப்பின மக்களுக்கு நிலங்கள் வழங்கப்படும் வகையில் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ராமஃபோசா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நிலச்சீர்திருத்தம் செய்வதற்கு ஏதுவாக அரசமைப்புச் சட்ட திருத்த முன்மொழிவை, ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முடிவு செய்யும். இந்த சீர்திருத்தம் பொருளாதாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

நிலச்சீர்திருத்த நடவடிக்கையை அரசமைப்புச் சட்டம் வெளிப்படையாக பேச வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது தெளிவாகியுள்ளது. அரசமைப்பு சட்ட ஜனநாயகத்திற்காகவே நாங்கள் முயற்சிக்கிறோம்.

தென் ஆப்பிரிக்காவில், நில உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடு ஏதும் தராமல் நிலங்களை கையகப்படுத்துவதற்கு அரசமைப்பு சட்டம் திருத்தப்படும்.

அனைவருக்குமான பொருளாதாரம், அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் வேலை என்பதற்கான சமூக திட்டத்தை வகுப்பதில் எல்லா தென் ஆப்பிரிக்கர்களும் எங்களோடு உழைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 10 சதவித நிலங்களே, வெள்ளை இன உரிமையாளர்களிடம் இருந்து கருப்பின மக்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

AFP/GETTY IMAGES

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers