31 மில்லியன் டொலர்களுடன் துபாய் இளவரசி ஓட்டம்: ஆத்திரத்தில் அரசர்!

Report Print Vijay Amburore in மத்திய கிழக்கு நாடுகள்

துபாய் நாட்டு அரசனும், உலக பணக்காரர்களில் ஒருவருமான ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூமின் மனைவி, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் லண்டனில் தலைமறைவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜோர்டான் மன்னரின் சகோதரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூமின் மனைவியுமான இளவரசி ஹயா (45) தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரியதாக அரச குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் அவர் ஜெர்மனில் தஞ்சம் கோரியதாகவும், ஜேர்மன் தூதரக அதிகாரி ஒருவரின் உதவியின் பேரில் தமது பிள்ளைகள் மகன் சயீத் (7) மற்றும் மகள் அல் ஜலீலா (11) ஆகியோருடன் 31 மில்லியன் டொலர்களை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகியிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ரஷீத் விடுத்த கோரிக்கையினை ஜேர்மன் அரசு நிராகரித்ததாக மத்திய கிழக்கு நாடுகளின் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவமானது இருநாடுகளும் மத்தியில் ஒரு இராஜதந்திர நெருக்கடியைத் தூண்டியுள்ளது. மேலும் ஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், துரோகி.... யாருடன் இப்பொழுது பிசியாக இருக்கிறாய்? என தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சமீப ஆண்டுகளாக கணவர் ரஷீத் மக்தூமுடன் ராயல் அஸ்காட் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ளும் ஹயா, கடந்த வாரம் லண்டனில் நடந்த ராயல் அஸ்காட் விழாவில் கணவருடன் அவர் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதனால் அவர் லண்டனில் இருந்து தான் தலைமறைவாகி இருக்கவேண்டும் என்கிற சந்தேகம் வலுக்கிறது.

இளவரசி ஹயா தனது கணவரிடமிருந்து தப்பித்ததாக வெளியான தகவல்கள் குறித்து ஜேர்மன் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.

ஜோர்டான் மன்னரின் சகோதரி - இளவரசி ஹயாவை தப்பி ஓட தூண்டியது குறித்து "கடுமையான கேள்விகள்" எழுந்துள்ளதாக துபாய் கண்காணிப்புக் குழுவின் தலைமை நிர்வாகி ராதா ஸ்டிர்லிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு துபாய் ஆட்சியாளர் ரஷீத் மக்தூமின் மகள் இளவரசி லதிஃபா, நாட்டில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புக முயன்றபோது இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஐக்கிய அமீரகத்திற்கே திருப்பி அனுப்பப்பட்ட அவர் தற்போது துபாயில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்