வெளிநாட்டில் ரத்தம் சிந்திய நிலையில் மர்மமாக இறந்த கணவர்: உடலை மீட்க போராடும் மனைவி

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியால் மர்மமான முறையில் இறந்துபோன கணவரின் உடலை மீட்டுத்தரும்படி மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவகார்த்திகேயன் (43) என்பவருக்கு திருமணமாகி மிதுன கோகிலா என்ற மனைவியும், ஜெய்ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் கடந்த 15 ஆண்டுகளாக ஓட்டுனராக சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 மே மாதம் 19ஆம் தேதி மீண்டும் சவுதி நாட்டில் ரியாத் நகரில் ஃபெச்சர் என்ற நிறுவனத்திற்கு ஓட்டுநர் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர்11ஆம் தேதி சிவகார்த்திகேயன் தனது மனைவி மிதுனகோகிலாவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அதன் பிறகு 5 தினங்களாக சிவகார்த்திகேயனிடம் இருந்து எந்த தொலைபேசி அழைப்பும் வரவில்லை. இதனால் கலக்கமடைந்த மிதுனகோகிலா கடந்த 22ம் தேதி ரியாத்தில் தனது கணவருடன் பணியாற்றும் நண்பர்களிடம் விசாரித்துள்ளார்.

அப்போது சிவகார்த்திகேயன் கடந்த 12ஆம் தேதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும் அவர் ஓட்டிச் சென்ற வாகனத்தின் பின் இருக்கையில் ரத்தம் சிந்திய நிலையில் இறந்து கிடந்ததாகவும், அவரது உடலை பொலிசார் எடுத்து சென்றுள்ளதாகவும் அதிர்ச்சிகர தகவலை நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் குறித்து அவர் பணியாற்றிய நிறுவனத்திடம் கேட்டபோது, சிவகார்த்திகேயன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஏன் இத்தனை நாளாக சிவகார்த்திகேயன் இறந்தது குறித்து தெரிவிக்கவில்லை என கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிவகார்த்திகேயனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சிவகார்த்திகேயனின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர மத்திய மாநில அரசுகள் உதவிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை அளித்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்