காதுவலியால் அவஸ்தையா? இதையெல்லாம் பண்ணிடாதீங்க

Report Print Fathima Fathima in மருத்துவம்

சத்தங்களை கேட்பதற்கு மட்டுமல்லாமல் நாம் நிலையாக நிற்பதற்கு கூட காது தான் முக்கிய பங்காற்றுகிறது.

நாம் தூங்கச் சென்றதும் கடைசியாக செயல்பாட்டை நிறுத்தும் காது, விழித்ததும் முதலில் செயல்படத் தொடங்குகிறது.

காது மண்டலம் வெளிக்காது(புறச்செவி), நடுக்காது(நடுச்செவி), உட்காது(உட்செவி) என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

சத்தம் எழுப்பும் போது வெளிக்காதின் வழியே ஊடுருவி காது ஜவ்வை அசைக்கிறது, எப்போது வெளிக்காது, உட்காது என இரண்டு பக்கமும் சரியான அழுத்தம் இல்லாமல் போனால் காது வலி ஏற்படும்.

இதுதவிர தொண்டையில் ஏற்படும் அழற்சி, நோய்க்கிருமிகளின் தாக்கம், சைனஸ் பிரச்சனை, சளி மற்றும் மூக்கடைப்பு அதிகமாகும் போது, பல் பிரச்சனைகள், வாய்களில் புண்கள், டாக்ஸின் பிரச்சனைகள், காதுக்குள் அதிகளவு தண்ணீர் செல்வது மற்றும் கழுத்துப் பகுதியில் எலும்பு தேய்மானம் போன்றவற்றாலும் காது வலி ஏற்படலாம்.

இவ்வாறான வலியின் போது எதையெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றி இங்கு காண்போம்.

செய்யக்கூடாதவை

காதுகளுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்னும் திரவம் சுரந்து கொண்டிருக்கும், இவ்வாறு சுரக்கும் போது காதுகளுக்குள் சேர்கின்ற அழுக்குகள் ஒரு கட்டத்துக்கு மேலே தானாக வெளியே வந்துவிடும். இதனால் குச்சியோ, பட்ஸ் போன்ற எந்த பொருளையும் விட்டு சுத்தம் செய்யக்கூடாது.

முக்கியமாக காதுகளுக்கு 80- 85 டெசிபல் வரையே சத்தத்தை தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறது, அதிகளவான சத்தமும் காதுகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவதுடன் சவ்வு கிழிந்துவிடும் அபாயமும் இருக்கிறது.

இதுதவிர இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் இயர்போன்களாலும் காதுகளுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகமுண்டு.

செல்போனில் பேசும் போது ஒரே காதில் வைத்து பேசக்கூடாது, அவ்வப்போது காதுகளை மாற்றி மாற்றி பேச வேண்டும்.

காது வலி வரும் போது எக்காரணத்தை கொண்டு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் காய்ச்சி காதுக்குள் விடக்கூடாது.

இதேபோன்று காதுக்குள் பூச்சி ஏதும் சென்றுவிட்டாலும் தலையை ஒருபக்கமாக சாய்த்து வைத்தாலே தானாக வெளியே வந்துவிடும், அந்நேரத்தில் தண்ணீரோ, எண்ணெயோ விட வேண்டாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்