விடுதலை புலிகள் மீதான ஐந்து ஆண்டு தடை உறுதி! மத்திய அரசுக்கு பறந்த தகவல்

Report Print Santhan in விடுதலைப்புலிகள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான 5 ஆண்டு தடையை டெல்லி உயர் நீதிமன்ற தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின் விடுதலைபுலிகள் அமைப்பு மீது மத்திய அரசு தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து அந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மே 14-ஆம் தேதி மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், இலங்கை போரில் கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டாலும், ஈழம் கொள்கையை விடுதலைப்புலிகள் அமைப்பு கைவிடவில்லை.

இதற்காக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு நிதிதிரட்டி வருகிறது. இந்த அமைப்பின் நடவடிக்கைகளை மீண்டும் ஒன்று திரட்டுவதற்கான முயற்சிகள் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த தடை நீட்டிப்பை எதிர்த்து விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் தீர்ப்பாயத்தில் தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதற்காக சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்(ஊபா) கீழ், கடந்த மே 27-ஆம் திகதி தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையிலான் தீர்ப்பாயம் டெல்லி மற்றும் சென்னையில் இது தொடர்பான விசாரணை நடத்தியது.

இதில், மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ உட்பட பலர் தீர்ப்பாயத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்தனர்.

இதனை கேட்ட தீர்ப்பாயம் விடுதலைப்புலிகள் மீதான தடையை கடந்த 7-ஆம் திகதி உறுதி செய்து அந்த தகவலை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

மேலும் விடுதலைப்புலிகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்