மனிதர்களுக்கு மட்டும் தான் புரிந்துகொள்ள முடியுமா? செல்லப்பிராணிக்கும் இந்த சக்தி உண்டு! ஆய்வில் கண்டுபிடிப்பு

Report Print Shalini in வாழ்க்கை முறை

மனிதர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதே தனி சுகம்தான். நம்மை சுற்றி வந்து நம்மிடம் அன்பாக இருக்கும் விலங்குகளை பார்த்தால் எமது மனம் உற்சாகம் பெறும். எமக்கு உள்ள கஷ்டம் குறைந்து விடும்.

பலவகையான செல்லப்பிராணிகள் இருந்தாலும், அவற்றில் நாய்தான் மனிதனுடன் மிக நெருக்கமான உளவியல் தொடர்பை உடைய விலங்கு. நாய்கள் மீது நாம் இன்னும் பாசம் செலுத்த ஊக்குவிக்கும் வகையில் ஹங்கேரி நாட்டில் ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டது.

"பேமிலி டாக் ப்ராஜெக்ட்" என்றழைக்கப்படும் அந்த ஆய்விலிருந்து ஒரு புதிய அதிசயம் கண்டுபிடிக்கப்பட்டள்ளது.அது என்னவென்று தெரியுமா? “நாய்களுக்கு நாம் பேசுவதை வார்த்தைகள் மூலமாகவும், நாம் கூறும் தொனியின் மூலமாகவும் புரிந்து கொள்ள முடியும்” என்பது தான்!

மனித மூளை மட்டும் அல்ல. பிற விலங்குகளின் மூளையும் வலதுபுறம் இடதுபுறம் என்று இரண்டு பிரிவுகளால் ஆனது. நாம் பேசும் போது சக மனிதர்களின் காது வழியாக ஒலி அவர்களின் மூளைக்கு சென்றடைகிறது.

மூளை ஒலியை செயலாக்கும் வேலையை வலது மற்றும் இடது மூளைகளுக்கு பிரித்து கொடுக்கும். வலது மூளை ஒலியின் தொனியை வைத்து எந்த மாதிரியான பேச்சு என்று முடிவு செய்யும். இடது மூளை என்ன வார்த்தைகள் பயன் படுத்துகிறோம் என்பதை கண்டுபிடித்து பேச்சின் அர்த்ததை முடிவு செய்யும்.

மனித மூளையை ஆய்வு செய்யும் எம்.ஆர்.ஐ (MRI) மெஷினை போன்று நாய்களின் மூளையை ஆய்வு செய்ய ஒரு எப்.எம்.ஆர்.ஐ (FMRI) மெஷின் வடிவமைக்கப்பட்டது.

இந்த மெஷினில் அசையாமல் உட்கார அளிக்கப் பட்ட பயிற்சி தான் அது. இதில் சுவாரசியம் என்னவென்றால் மனிதர்களின் கை மற்றும் கால் அசையாமல் இருக்கப் போடப்படும் "பாடி கன்ஸ்ட்ரைன்ஸ்"(Body constrains) கூட பயன்படுத்தாத போதிலும் நாய்கள் எம்.ஆர்.ஐ மெஷினுக்குள் அசையவே இல்லை.

பின்னர் நாய்களின் உரிமையாளர்கள் நான்கு விதமான பேச்சுக்களை பேசிக்காட்டினர்.

1. பாராட்டும் தொனியில் பேச்சு

2. சாதாரண தொனியில் பாராட்டு

3. பாராட்டும் தொனியில் அர்த்தமற்ற வார்த்தைகள்

4. சாதாரண தொனியில் அர்த்தமற்ற வார்த்தைகள்

இவ்வாறு நான்கு வகை பேச்சுகளையும் நாய்கள் கேட்கும் போது அவைகளின் மூளை எவ்வாறு வேலை செய்கிறது என்பது எப்.எம்ஆர்.ஐ மெஷின் மூலம் கண்காணிக்கப்பட்டது.

இந்த பரிசோதனையிலிருந்து கிடைத்த முடிவுகள் என்னவென்று தெரியுமா?

1. முதல் வகை பேச்சின் போது வலது மற்றும் இடது மூளைகள் வேலை செய்தன.

2. இரண்டாம் வகை பேச்சின் போது இடது மூளை மட்டும் வேலை செய்தது.

3. மூன்றாம் வகை பேச்சின் போது வலது மூளை மட்டும் வேலை செய்தது.

4. நான்காம் வகை பேச்சின் போது இரண்டு மூளைகளும் வேலை செய்யவில்லை.

5. மேலும் பாராட்டும் தொனியில் பாராட்டும் போது மனித மூளையில் "ரிவார்ட் சென்டர்" என்ற இடம் வேலை செய்யும். அதே இடம் முதல் வகை பேச்சின் போது நாய்களுக்கும் வேலை செய்தது. இது மனித மூளையைப் போன்றே வேலை செய்யும் முறையாகும்.

மேலே கூறப்பட்ட முடிவுகளை வைத்து பார்த்தால் நாய்கள் வார்த்தைகள், தொனி ஆகிய இரண்டையும் செயலாக்கும் திறமை உடையவை என்பது தெரிய வந்தது.

மேலும் மனிதர்களுக்கு மட்டும் தான் புரிந்துகொள்ளும் திறமை இருக்கின்றது என்று பல நாட்களாக இருந்த அனுமானத்தை இந்த ஆய்வு உடைத்துள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாய்கள் மனிதர்களுடன் பழகி வந்துள்ளன. எனவே இந்த ஆய்வு எளிதாக முடிந்துள்ளது. மற்ற செல்லப்பிராணிகளை ஆய்வு செய்வது சற்று கடினம் என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள்.

இதுபற்றிப் பேசிய ஆய்வில் பங்கேற்ற அட்டிலா ஆன்டிக்ஸ், "மனிதர்களின் பேச்சை நாய்கள் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் இது முதல் படி. மனிதனுடையதும் நாய்களினதும் உறவை இது மேம்படுத்த உதவும்" என்றார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments