முள்ளிவாய்க்கால் நினைவு தூணை மீண்டும் நிறுவ அடிக்கல் நாட்டினாலும் இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் நடக்கும்! வைகோ உறுதி

Report Print Raju Raju in இந்தியா
68Shares

யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூணை மீண்டும் நிறுவ அடிக்கல் நாட்டினாலும், இடித்ததை கண்டித்து இன்று திட்டமிட்டபடி இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடப்படும் என வைகோ கூறியுள்ளார்.

இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த 8ம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர்.

இடிக்கப்பட்ட நினைவு சின்னத்தை மீண்டும் அமைக்க அனுமதிக்க வேண்டும், பல்கலைக்கழக வளாகத்தை விட்டு போலீசார் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களின் கோரிக்கை மற்றும் அரசின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில் அரசின் அங்கீகாரத்துன், மீண்டும் பழைய வடிவத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என துணைவேந்தர் உறுதி அளித்தார்.

இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஏற்கனவே முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடப்படும் என மதிமுக பொது செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.

தற்போதும் அவர் அதில் உறுதியாக உள்ளார்.

இது குறித்து வைகோ கூறுகையில், யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூணை மீண்டும் நிறுவ அடிக்கல் நாட்டினாலும், இடித்ததை கண்டித்து இன்று திட்டமிட்டபடி இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்