தமிழகத்தில் மகனை விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி சத்யாநகரைச் சேர்ந்தவர் சகுந்தலா (வயது 45), இவருக்கு இரண்டு மகன்கள் பிரசாந்த்(வயது 22), பிரதீப்(வயது 20) இருக்கின்றனர்.
கணவரை பிரிந்து விட்ட சகுந்தலா, மகன்களுடன் வசித்து வந்தார், இந்நிலையில் கடந்த 3-ந் தேதி சுத்தமல்லி பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 10 பவுன் நகை, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் நேற்று முன்தினம் பிரதீப், அதே பகுதியைச் சேர்ந்த அன்புராஜ், அருள் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் மடிக்கணினி உள்ளிட்டவைகளை திருடியதை 3 பேரும் ஒப்புக்கொண்டனர். அந்த மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் பிரதீப் வீட்டில் இருந்தது.
அதை எடுப்பதற்காக நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரி, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சத்யா நகருக்கு புறப்பட்டு சென்றனர்.
அங்குள்ள பிரதீப் வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள். திருடப்பட்ட மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை போலீசார் மீட்டனர். அத்துடன் அங்கிருந்த பிரதீப் அண்ணன் பிரசாந்தையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதை சகுந்தலா தடுத்ததுடன் பிரசாந்தை ஏன் அழைத்து செல்கிறீர்கள்? என கேட்டுள்ளார், இதனால் அவருக்கும், பொலீசுக்கும் வாக்குவாதம் நடக்க ஒருகட்டத்தில் லத்தியால் பொலீஸ் தாக்கியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சகுந்தலா, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார், பதறிப்போன பொலிசார் உடனடியாக அவரை மீட்டு மருத்துவனையில் சேர்த்த போதும் செல்லும் வழியிலேயே இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.