தனிமைப்படுத்தப்பட்டாரா நடிகர் கமல்ஹாசன்? வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை

Report Print Vijay Amburore in இந்தியா

நடிகர் கமல்ஹாசன் வீட்டின் சுவற்றில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

தீவிரமடைந்து வரும் கொரோனாவிலிருந்து பாதுக்காக்கும் நடவடிக்கையாக, வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டு அவர்களுடைய வீடுகளில் தமிழக அரசால் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அதனை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக உள்ளாட்சி அமைப்புகள் அவர்களுடைய வீட்டின் சுவற்றில் சுவரொட்டிகளை ஓட்டிச்செல்கின்றன.

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீட்டுச்சுவற்றில், நேற்று இரவு கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் இந்த நோட்டீசை ஒட்டியுள்ளனர்.

அதில், கொரோனாவில் இருந்து எங்களைக் காக்க, சென்னையைக் காக்க, எங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம் என கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், “நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை” என நடிகர் கமல்ஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும், கடந்த 2 வாரங்களாக என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன் எனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தவறுதலாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை அகற்றியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்