மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கணவருக்கு சமைத்தால் மறுபிறவியில் இது தான் நடக்கும்! சாமியாரின் வைரல் வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியா மதகுரு ஒருவர் மாதவிடாய் நேரத்தில் கணவருக்கு உணவு சமைத்தால், மறுபிறவியில் அவர்கள் நாயாக பிறப்பார்கள் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் பூஜ் பகுதியில் ஸ்ரீசகஜானந்த் பெண்கள் இன்ஸ்டிடியூட் ஒன்று இயங்கி வருகிறது. சுவாமி நாராயணன் கோயில் டிரஸ்ட் மூலம் இந்த கல்லூரி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் இங்குள்ள விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள், தங்களது மாதவிடாய் காலத்தில் சக மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்பதும், பழகுவதும் கூடாது என்ற கட்டாயம் உள்ளது.

இருப்பினும் இந்த விதியை சில மாணவிகள் மீறியதாக கூறப்படுகிறது. இதனால் இது குறித்த தகவல் விடுதி காப்பாளருக்குத் தெரியவந்ததால், அவர் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின், விடுதி காப்பாளர் அளித்த புகாரின் பேரில், கல்லூரி முதல்வர் தலைமையில், விடுதியில் இருந்த 68 மாணவிகளையும் கழிவறைக்கு வரிசையாக அழைத்துச் சென்று அவர்களது உள்ளாடைகளைக் களையச் செய்து சோதனை நடத்தி உள்ளனர். இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீடு உள்ளிட்ட நெருக்கடி காரணமாகக் கல்லூரி முதல்வர் ரீட்டா ரணிங்கா , கல்லூரி நிர்வாகி ரமீலா பென், புயூன் நைனா உள்பட 3 பேர் கடந்த 11-ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கல்லூரி முதல்வர், விடுதி காப்பாளர்,அலுவலக உதவியாளர் ஆகியோரையும் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

இந்நிலையில், சுவாமி குருஸ்னஸ்வரூப் தாஸ்ஜி பேசும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ எங்கு எப்போது பேசியது எனத் தெரியவில்லை. ஆனால் தற்போது வைரலாகி வருகிறது.

அதில், மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமைக்கும் உணவை உண்ணும் கணவர் அடுத்த பிறவியில் காளை மாடாகவும், அந்த மாதவிடாய் நேரத்தில் கணவருக்கு உணவு சமைக்கும் பெண்கள் அடுத்த பிறவியில் பெண் நாயாகவும் பிறப்பார்கள்.

என்னுடைய கருத்தை நீங்கள் விரும்பாவிட்டாலும் எனக்குக் கவலையில்லை. இவை அனைத்தும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆதலால் கணவன்மார்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கவனக்குறைவாக இருந்து உணவு சமைத்தால் அது பாவமாகும்.ஆதலால், ஆண்கள் சமையல் கற்றுக்கொள்ள வேண்டும்.அது உங்களுக்கு உதவும் என கூறியுள்ளார். இது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்