சீன கப்பலில் சென்னை வந்திறங்கிய பூனை: பீதியடைந்த மக்கள்

Report Print Vijay Amburore in இந்தியா
271Shares

சென்னை துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் உயிருள்ள பூனை ஒன்று கூண்டுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் வந்திறங்கியது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வுஹானில் இருந்து பரவியதாக நம்பப்படும் கோவிட் -19 கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பலியாகும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுப்பதற்கான முயற்சிகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் சீனாவில் தங்கியிருப்பவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை என கடந்த 11-ஆம் திகதி இந்திய கப்பல்துறை அமைச்சகம் வெளியிட்‌ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 15 அல்லது அதற்கு பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான், பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழியே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியாக இந்தியா வர தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமையன்று கப்பல் துறைமுகத்தை வந்தடைந்ததும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். விலங்குகள் பிரத்யேகமாக கொண்டுவரப்படும் கூண்டில் பூனை இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் அந்த பூனைக்கு சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்