மொபைல்போன் தொடர்பு துண்டிப்பு... காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட மூவர்: வெளியாகும் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

15 நாட்களுக்கு முன் மாயமான சட்டமன்ற உறுப்பினரின் உறவினர்கள் மூவர் கால்வாயில் ஓடும் தண்ணீருக்குள் கவிழ்ந்து கிடந்த காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள பெத்தபள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோகர் ரெட்டி.

அவருடைய இளைய தங்கை ராதிகா. இவருடைய கணவர் சத்தியநாராயணா, மகள் சகஸ்ரா ஆகியோருடன் கடந்த மாதம் 27 ஆம் திகதி பெத்த பள்ளியில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

அடுத்த நாள் மாலை அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள உறவினர்கள் முயன்றனர். ஆனால் மூன்று பேரின் செல்போன்களும் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்தது.

அன்று முதல் மூன்று பேர் என்ன ஆனார்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. எனவே மூன்று பேரையும் காணவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பெத்தபள்ளி பொலிசார் மூன்று பேரையும் தேடி வந்தனர்.

மட்டுமின்றி, அவர்களின் குடியிருப்பில் சென்று சோதனையிட்ட நிலையிலும் பொலிசாருக்கு தகவல் ஏதும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கால்வாயில் விழுந்து விட்டார்.

விழுந்த பெண்ணையும் மோட்டார் சைக்கிளையும் மீட்பதற்காக கால்வாய் மூலம் பாசனத்திற்காக திறக்கப்பட்டு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

கால்வாயில் வரும் தண்ணீரின் அளவு குறைந்து அலுகுனூரு கிராமம் அருகே சத்திய கால்வாயில் கார் கவிழ்ந்து கிடப்பது தெரியவந்தது.

கால்வாயில் கவிழ்ந்து கிடந்த காருக்குள் மூன்று பேரின் உடல்கள் இருப்பது உள்ளிட்ட தகவல்களை அந்த பகுதி மக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் கிரேன் மூலம் காரை வெளியே எடுத்துள்ளனர்.

அந்த காருக்குள் சட்டமன்ற உறுப்பினர் மனோகர் ரெட்டியின் இளைய தங்கை ராதிகா, அவருடைய கணவர் சத்தியநாராயணா, அவருடைய மகள் சகஸ்ரா ஆகியோர் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

தெலுங்கானா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் முதலில் ராதிகா குடும்பத்திரைக் காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த பொலிசார், தற்போது சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடக்கி உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்