மேல் தளத்தில் 4 பேர் இறந்துகிடப்பது கூட தெரியாமல் அதே வீட்டில் வசித்து வந்த வயதான பெற்றோர்!

Report Print Vijay Amburore in இந்தியா

உத்திரபிரதேச மாநிலத்தில் வியாபாரி ஒருவர் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தின் வாரணாசி பகுதியை சேர்ந்த 46 வயதான சேதன் துளசியன் என்கிற வியாபாரி, மனைவி ரிது துல்சியன் (42), மகன் ஹர்ஷ் (17) மற்றும் மகள் ஆர்ஷி (15) ஆகியோருடன் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்துள்ளார். அவருடைய பெற்றோர் கீழ் தளத்தில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் பொலிஸாருக்கு போன் செய்த சேதன், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டதாகவும், தற்போது தானும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், அவருடைய வீட்டிற்கு விரைந்து சென்று கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்த சேதன் துளசியனின் தந்தை, பொலிஸ் வந்திருப்பதை பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் திகைத்துள்ளார்.

சேதன் தங்கியிருக்கும் அறையை பற்றி கேட்டறிந்த பொலிஸார், மேல் தளத்திற்கு சென்றுபார்த்த போது, கதவு உள்தாழ்ப்பால் போடப்பட்டிருந்தது.

கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, சேதன் சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார். அதற்கு அருகில் அவருடைய மனைவி இறந்த நிலையிலும், படுக்கையில் அவருடைய மகனும், மகளும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.

அதன்பிறகே வீட்டில் அசம்பாவிதம் நடந்திருப்பது சேதனின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சோக சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்