வேறு மொழி உள்ள ஊரில் தனியாக தமிழ் பேசிய பெண்! விசாரணையில் தெரிந்த உண்மை... 14 ஆண்டுகால தேடுதலுக்கான விடை

Report Print Raju Raju in இந்தியா

14 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தாயை அவரின் மூன்று பிள்ளைகள் தற்போது கண்டுபிடித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தின் கொரட்டாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் லூர்து மேரி. இவருக்கு குழந்தை இயேசு என்ற மகனும், ஞான அந்தோணி, ரேச்சல் லிஸியா என்கிற இரு மகள்களும் உள்ளனர்.

லிஸியா பிறந்து சில மாதங்களே ஆன நிலையில் திடீரென்று ஒரு நாள் காணாமல் போனார் லூர்து மேரி. மனைவி காணாமல் போன அடுத்த ஆண்டே, லூர்து மேரியின் கணவர் ஜான்சனும் இறந்து போக, லூர்து மேரியின் பிள்ளைகள் உறவினர்களின் ஆதரவால் வளர்ந்து வந்தனர்.

14 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் ஜான் லூயிஸ், மங்களூருவில் உள்ள ஒயிட் டவ்ஸ் ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அந்த இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பெண் ஒருவர் தமிழில் பேசுவதாகக் கூறிய நிர்வாகிகள் பாதிரியாரை அந்தப் பெண்ணிடம் அழைத்துச் சென்றனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் லூர்து மேரியை மீட்ட மங்களூரு பொலிசார் ஒயிட் டவ்ஸ் இல்லத்தில் ஒப்படைத்ததாகவும், அவருக்கு சிகிச்சை அளித்த பிறகு தற்போதுதான் ஊர்ப்பெயரைச் சொல்லும் அளவிற்கு தேறி இருப்பதாகவும் ஒயிட் டவ்ஸ் நிர்வாகிகள் பாதிரியாரிடம் தெரிவித்தனர்.

பாதிரியாரிடம் அந்தப் பெண் தனது பெயர் லூர்து மேரி என்றும், ஊர் கொரட்டாம்பட்டு என்றும் கூறினார். இதையடுத்து கிறிஸ்தவ அமைப்புகள் மூலமாக அந்த கிராமத்திற்கு தகவல் கொடுத்தார் பாதிரியார்.

14 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தங்களது தாய் மங்களூருவில் இருப்பதை அறிந்த லூர்து மேரியின் பிள்ளைகள் உடனடியாக அவரைக் காண மங்களூரு விரைந்தனர்.

லூர்து மேரி காணாமல் போனபோது 9 வயது சிறுவனாக இருந்த குழந்தையேசு இப்போது ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரது மூத்த தங்கை ஞான அந்தோணி கோவையில் பாரா மெடிக்கல் படித்து வருகிறார். தாயைப் பிரியும்போது சில மாத குழந்தையாக இருந்த லிசியா, தற்போது 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

குழந்தைகளாக இருக்கும்போது அவர்களைப் பிரிந்த லூர்து மேரி, பிள்ளைகள் வளர்ந்து வந்து தன் முன் நிற்பதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த காட்சி மனதை உருக்கியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்