பழைய பொருட்களுடன் சேர்த்து 15 சவரன் நகையையும் வியாபாரியிடம் தூக்கிக்கொடுத்த பெண்

Report Print Vijay Amburore in இந்தியா

தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் 15 சவரன் நகை இருப்பது தெரியாமல் பழைய செய்தித்தாள்களை குப்பை வியாபாரியிடம் விற்பனை செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கலாதேவி (45) என்கிற பெண் கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய வீட்டில் இருந்த செய்தித்தாள்களை, பழைய பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் ஒரு வியாபாரியிடம் விற்பனை செய்துள்ளார்.

அவர் வீட்டிலிருந்து கிளம்பிய சில மணி நேரத்திற்கு பிறகே, கலாதேவி தன்னுடைய 15 சவரன் நகையை செய்தி தாள்களுக்கு இடையே மறைத்து வைத்திருந்தது நினைவுக்கு வந்துள்ளது.

உடனே அவர் அப்பகுதி முழுவதும் பல இடங்களில் வியாபாரியை தேடி அலைந்துள்ளார். அவரை எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இறுதியில் பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில், செல்வராஜ் (55) என்கிற வியாபாரி செய்தித்தாள்களை வாங்கிக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியிருப்பது தெரியவந்தது.

உடனே அவருடைய கடைக்கு விரைந்து பொலிஸார் சோதனையிட்டனர். அங்கு, கலாதேவி கொடுத்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை அப்படியே அந்த செய்திதாள்களுக்கு இடையில் இருப்பதை கண்டறிந்து பொலிஸார் கைப்பற்றினர்.

இந்த நிலையில் செல்வராஜின் நல்ல மனதை பாராட்டி கலாதேவி அவருக்கு ரூ.10000 அன்பளிப்பாக அளித்துள்ளார். மேலும் திருடர்களுக்கு பயந்தே தன்னுடைய நகையை பழைய செய்தித்தாள்களுக்கு இடையில் வைத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்