பரோலில் விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன்... கண்ணீர் மல்க மகனை வரவேற்ற அற்புதம்மாள்

Report Print Basu in இந்தியா

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் ஒரு மாத பரோலில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

பரோலின் போது, எந்த நேரத்திலும் எந்த மருத்துவமனைக்கும் தனது தந்தையை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவும், நவம்பர் 23ம் திகதி கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ள சகோதரி மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்கும் பேரறிவாளனுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சலுகைகளை தவிர வேறு எங்கும் செல்ல பேரறிவாளனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வேலூர் சிறையில் இருந்து இன்று காலை 10:45 மணிக்கு விடுவிக்கப்பட்ட பேரறிவாளன், ஜோலார்பேட்டை கோவிந்தசாமி தெருவில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது தாய் அற்புதம்மாள் கண்ணீர் மல்க மகனை வரவேற்றார்.

வேலூர் சிறைச்சாலையில் இருந்து அவரை பரோலில் விடுவிப்பதற்கு முன்பு, உள்ளுர் பொலிஸ் படையினரால் பாதுகாப்பை வழங்குவதற்காக, செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னையில் உள்ள புழல் சிறைச்சாலையில் இருந்து மாற்றப்பட்டார்.

ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 10 ஆயுத ரிசர்வ் பொலிசார், மற்றும் 10 உள்ளுர் பொலிசார் என டிஎஸ்பி ஆர் தங்கவேலு தலைமையிலான 20 பொலிஸ் குழுவினர் பேரறிவாளன் வீட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நவம்பர் 12ம் திகதி முதல் டிசம்பர் 13ம் திகதி வரை பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தினமும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பரோல் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும்.

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் 2017க்கு பின் இரண்டாவது முறையாக அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

2வது முறை மகனை பரோலில் விடுவித்ததற்காக தமிழக அரசிற்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மாநில அரசு விரைவில் தனது மகனை விடுதலை செய்யும் என நம்பிக்கையுடன் இருப்பதாக தெரவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்