தாலி பிச்சை கேட்டாள்... அந்த ஆடியோவை கேட்க முடியவில்லை! மகளை இழந்த தந்தை கண்ணீர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணமான சில தினங்களிலே இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், பெண்ணின் தந்தை என் மகள் பேசிய அந்த ஆடியோவை என்னால் கேட்க முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

சென்னை திரிசூலம், லட்சுமணன் நகரைச் சேர்ந்தவர் அபின்ராஜ். டிரைவரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் மகள் மனிஷாவுக்கும் கடந்த 25-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து 7 நாட்களே ஆன நிலையில், மனிஷா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அவர் அபின்ராஜ், அவரின் தோழி அனிதா ஆகியோரிடம் பேசியிருந்த ஆடியோ வெளியாகியிருந்தது.

அதுமட்டுமின்றி இது தற்கொலை இல்லை, என் மகளை கொலை செய்திருக்கலாம் என்று அவரின் தந்தை முருகன் கூறியிருந்தார்.

மனிஷா-அபின்ராஜ்

இந்நிலையில் முருகன் தன் மகள் குறித்து மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

அதில், நான் நெல்லை மாவட்டம், புளியங்குடியை சேர்ந்தவர். சென்னையில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் டிரைவராக பணியாற்றி வருகிறேன்.

எனக்கு இரண்டு பிள்ளைகள், மனிஷாவிற்கு 3-வயது இருக்கும் போதே என் மனைவி, அதாவது அவளுடைய அம்மா இறந்துவிட்டாள்.

இரண்டு பேரையும் இன்ஜினியரிங் படிக்க வைத்தேன். அதில் மனிஷா நான் வேலை பார்க்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தார்.

இரண்டு ஆண்டுகள் ஹாஸ்டலில் தங்கியிருந்த அவர், மூன்றாம் ஆண்டு வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்த போது, அபின்ராஜும், மனிஷாவும் காதலிப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.

முருகன்

இதனால் இரண்டு பேரையும் கண்டித்துவிட்டு, திரிசூலம் பகுதியில் இருந்து, அனகாபுத்தூருக்கு வீட்டை மாற்றினேன்.

அதன் பின் நான் இந்த காதல் விவகாரத்தையே மறந்துவிட்டேன், ஆனால் அவர்கள் இருவரும் எனக்கு தெரியாமல் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

நான் கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு, பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு போன் கால் வந்தது, அதில் பேசிய நபர், உங்கள் மகளை அழைத்துச் செல்கிறேன், நான் அபின்ராஜ் என்று மட்டும் கூறி வைத்துவிட்டார்.

அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் மன்ஷாவும், அவனும் மாலையும், கழுத்துமாக வந்து நின்றனர்.

நாங்கள் இருவரும் மேஜர் என்பதால், திருமணம் செய்து கொண்டோம் என்று கூறினாள், நான் அவளிடம் நீ படித்து முடிம்மா, அதன் பின் அபின்ராஜை திருமணம் செய்து கொள் என்று கூறினேன்.

அப்படி மட்டும் அவள் கேட்டிருந்தால், இன்று உயிரோடு இருந்திருப்பாள். கடந்த 25-ஆம் திகதிக்கு பின் நான் என் மகளிடம் பேசவேயில்லை.

அவள் இறந்த போது, தான் ஒரு போன் கால் வந்தது. அதில் உங்கள் மகள் இறந்துவிட்டாள் என்று கூறினர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், என் மகளை அதன் பின் பிணவறையில் தான் பார்த்தேன், என் மகள் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

அப்போது தான் ஒரு நபர் மனிஷா தொடர்பாக என்னிடம் முக்கிய ஆதராம் இருப்பதாக ஆடியோ ஒன்றை கொடுத்தார்.

அந்த ஆடியோவைக் கேட்ட போது நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன், அதில் என் மகள் தாலிபிச்சை கேட்டு கதறி அழுததை என்னால் கேட்கவே முடியவில்லை, இந்த நிலை எந்த பெண்ணிற்கும் வரகூடாது.

என்னுடைய மகள் மரணத்தில் பல சந்தேகங்கள் இருக்கின்றன. அவள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால், கழுத்தில் காயங்கள் இருப்பதாக பொலிசார் கூறுகின்றனர். ஆனால் அவளின் காலில் காயம் இருக்கிறது.

மனிஷாவின் சடலத்தை யார் கீழே இறக்கினார்கள், காலில் எப்படி காயம் ஏற்பட்டது போன்ற கேள்விகளுக்கு இன்னமும் பதில் இல்லை.

சென்னையில் எனக்கு சொந்த பந்தம் யாரும் இல்லாதால், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் உள்ள மயானத்திலேயே மனிஷாவின் உடலை தகனம் செய்தேன், அவள் கடைசி வரை அனுபவித்த கஷ்டங்களை என்னிடம் கூறவில்லை.

அவள் என்ன தான் தவறு செய்திருந்தாலும், என்னிடம் வந்திருந்தால், நான் அவளை ஏற்றுக் கொண்டிருப்பேன், இப்படி விட்டிருக்கமாட்டேன் என்று கண்கலங்கியுள்ளார்.

மேலும் மனிஷாவின், லேப்டாப் மற்றும் செல்போனில் ஆதாரம் இருக்க வாய்ப்புள்ளதால், அதை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்