சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல! அமைச்சரின் சர்ச்சை பேச்சு

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் மதுசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் திகதி, கர்நாடக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானபோது, அமைச்சர் லட்சுமண் சாவடி தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

அதனை அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் சி.சி.பாட்டீல் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்துள்ளது. கோவிந்த கார்ஜோல், அஸ்வத் நாராயணன், லட்சுமண் சாவடி ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்தவருக்கு (லட்சுமண் சாவடி) அமைச்சரவையில் இடம் அளித்திருப்பதை, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கடுமையாக விமர்சித்தார்.

அதற்கு பதிலளித்த மாநில சட்டத்துறை அமைச்சர் மதுசாமி, ‘சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல. ஆபாச படம் பார்ப்பது தார்மீக ரீதியில் தவறானதுதான். அவர் எதிர்பாராதவிதமாக செல்போனில் அதை பார்த்துவிட்டார்’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘அவர் அமைச்சராகக் கூடாது என்று வாதிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நாம் எல்லோரும் தவறு செய்பவர்கள் தான். அவர் யாரையும் ஏமாற்றவில்லை அல்லது தேச விரோத செயல்களில் ஈடுபடவில்லை.

அதற்காக ஆபாச படம் பார்ப்பது சரி என்று கூறவில்லை. அந்த விவாதம் தேவையற்றது என்று தான் கூறுகிறேன்’ என தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சால் கர்நாடகாவில் சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்