நீரவ் மோடி போன்ற வங்கி மோசடியாளர்கள் இனி இந்தியாவில் உருவாகமாட்டார்கள் - நிர்மலா சீதாராமன் உறுதி !

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார மந்த நிலை குறித்து விளக்கம் அளித்த 10 நாட்களுக்குள் வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி புதிய அறிவிப்பை வெளியிட்டு, நிரவ் மோடி போன்ற வங்கி மோசடியாளர்கள் இனி உருவாகமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை மந்தமாக உள்ளதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் விளக்கம் அளித்தார். அப்போது அவர், உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 சதவிதமாக உள்ளது என்றும், பொருளாதார நிலையில் சில நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா நல்ல நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் பொருளாதார மாற்றங்களை அரசு கண்காணித்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், 10 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, யுனைடெட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி ஆகியவை இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோல், கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கிகள் இணைக்கப்படும் என்றும், யுனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் இணைக்கப்படும். இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகள் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் கூறுகையில், ‘தொழில்துறையை ஊக்குவிக்க ஏற்கனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வங்கிகளில் கடன்களை விரைந்து வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வங்கித்துறை சீர்திருத்தங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுத்துறை வங்கி நிர்வாகிகளை தேர்வு செய்வதில் அரசின் தலையீடு இருக்காது. அரசின் நடவடிக்கைகளால் வங்கிகளின் வாராக்கடன் ரூ.7.90 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. ரூ. 1.21 லட்சம் கோடி வாராக்கடன் அரசின் முயற்சியால் வசூலிக்கப்பட்டுள்ளது. 8 வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.

நாட்டில் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் 14 லாபத்தில் இயங்குகின்றன. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள். நிர்வாக ரீதியற்ற தலைவர் அனைத்து வங்கிகளிலும் நியமிக்கப்பட வேண்டும்.

ரூ. 250 கோடிக்கு மேலான கடன்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். குறைந்த அளவிலான கடன்கள் வழங்குவது 20.5 சதவிதம் உயர்ந்துள்ளது. நீரவ் மோடி போன்ற வங்கி மோசடி பேர்வழிகள் இனி உருவாகமாட்டார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers