ஆண்மை குறைவு மருந்தை வெளிநாட்டில் விற்கிறோம்.... உங்களுக்கு பணம் கொட்டும்.. கோடிக்கணக்கில் சுருட்டிய நபர்கள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் ஆண்மைக்குறைவு நோய்க்கான மருந்துகளை வெளிநாட்டுக்கு அனுப்பி அதிக லாபம் பார்ப்பதாக கூறியும் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணத்தை கொடுப்பதாக கூறியும் கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பல் பிடிபட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் குவாலிட்டி டிரேடர்ஸ் என்னும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், ‘ரிலீஃப் ஹெர்பல்ஸ்’ என்ற பெயரில் ஆண்மைக்குறைவு, மூலம் போன்ற பல்வேறு நோய்களுக்கு இயற்கை மருந்துகளை விற்பனை செய்தும் வந்திருக்கிறது.

இந்த நிறுவனத்தின் இயக்குநரான தங்கராஜ் என்பவர், எங்கள் நிறுவனத்தில் 300 ரூபாய்க்கு தயாரிக்கும் மருத்துகளை வெளிநாட்டில் 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கிறோம்.

எனவே, எங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால், தினமும் 2,500 ரூபாய் வீதம் 100 நாள்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் என ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பைப் பார்த்த பலரும், நிறுவனத்திற்கு நேரடியாக வந்து பணத்தை முதலீடு செய்தனர்.

ஆரம்பத்தில் ஒருசிலர் சில லட்சங்களை முதலீடு செய்ய, அவர்களுக்கு தினமும் 2,500 ரூபாயை நிறுவனம் கொடுத்திருக்கிறது.

இந்த லாபத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த நபர்கள் நிலத்தை அடமானம் வைத்தும், கையிலுள்ள பல லட்ச ரூபாயை முதலீடு செய்திருக்கின்றனர்.

ஒரு கட்டத்தில், பல கோடி ரூபாயை வாரிக் குவித்ததும் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

1000-க்கும் மேற்பட்டோர் இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேல் முதலீடு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனிடையில் நிறுவனத்தின் ஊழியர்களான பிரபாகரன், துரைசாமி, பொன்னுசாமி ஆகிய மூன்று பேர் பிடிபட்டுள்ளனர்.

அவர்களிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள தங்கராஜ் பிடிப்பட்டால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்