முதியவர்கள்தான் அதிகமாக வரம்பு மீறுகிறார்கள்.. அதிர வைத்த பள்ளி மாணவிகளின் புகார்!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்ட, போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதியவர்களால் தான் பாலியல் தொல்லை அதிகமாக இருப்பதாக மாணவிகள் கடிதம் மூலம் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில், பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விளக்க, சட்டக்கல்லூரி மாணவிகள் 75 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதன் பின்னர், மாவட்டத்தில் ஒரே நாளில் 14 மகளிர் பள்ளிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும், பாதிப்பு ஏற்பட்டால் தைரியமாக வெளியில் கூறும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த சந்தேகங்கள் மற்றும் மாணவிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கருத்துக்களை தெரிவிக்க, ரகசிய புகார் பெட்டி வைக்கப்பட்டது.

அதில் மாணவிகள் தாங்கள் எழுதிய புகார் கடிதங்களை போட்டனர். பின்னர் புகார் கடிதங்களை ஆராய்ந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. பல மாணவிகள் சிறு வயது முதல் தற்போது வரை பாலியல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதில் தெரிவித்திருந்தனர்.

அதில் குறிப்பாக உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மூலமாக மட்டும் அல்லாது, முதியவர்கள் மூலமாகத்தான் அதிகம் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் கூறுகையில், ‘ரகசிய பெட்டியில் மாணவிகள் அளித்த தகவல்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்படும். வெளிப்படையாக யாரும் விசாரிக்கப்பட மாட்டார்கள்.

இதில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு, இனி இதுபோன்ற செயல்படாமல் தடுக்கப்படுவதுடன், அவர்களை தனியாக அழைத்து வந்து கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு எச்சரிக்கப்படுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers