நீங்கள் செவ்வாய்கிரகத்தில் சிக்கிக் கொண்டாலும் காப்பாற்றுவேன்: சுஷ்மாவின் பாசம்

Report Print Arbin Arbin in இந்தியா

முந்தைய நரேந்திர மோடி ஆட்சியில் மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ்.

வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு ஏதாவது சிக்கல் என்றால் தனியாக தங்களது டுவிட்டர் மூலம் சுஷ்மாவுக்கு டுவீட் செய்து உதவியை நாடுவார்கள்.

கடந்த முறை அமைச்சரவையில் பங்கேற்ற இவர், தற்போதைய ஆட்சியில் எந்த வகையிலும் பங்கேற்கவில்லை. தேர்தலிலும் போட்டியிடவில்லை.

தன்னுடைய 25 வயதில் அமைச்சரவையில் இடம் பெற்றவர் சுஷ்மா. இந்திரா காந்திக்குப் பின்னர் இரண்டாவது பெண் வெளிவிவகாரத்துறை அமைச்சர் என்ற பெயர் பெற்றவர்.

இதுவரை 7 முறை நாடாளுமன்றத்துக்கும், 3 முறை சட்டமன்றத்துக்கும் தெரிவு செய்யப்பட்டவர்.

கடந்த முறை வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, நீங்கள் செவ்வாயில் மாட்டிக் கொண்டாலும் எனக்கு தகவல் கொடுங்கள் நான் உங்களை காப்பாற்றுவேன் என்று தெரிவித்து இருந்தார்.

சண்டிகரில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு முடித்தவர். சட்டப்படிப்பு முடித்தவுடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார்.

1970ல் அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத்தில் இணைந்து தனது அரசியல் வாழ்வை துவக்கினார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் சட்டக்குழுவில் இடம் பெற்றார்.

இதையடுத்தே ஹரியானாவில் இருந்து சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். அப்போது அவரது வயது 25. இதைதொடர்ந்து தேவிலால் அமைச்சரவையில் கேபினட் அமைச்சரானார்.

2014ல் இருந்து மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த ஆட்சியின்போது, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அதில் இருந்தே அவரது உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு சிறிது சிறிதாக அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கத் துவங்கினார். கட்சி பேதமின்றி இவரை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் உறவு பாராட்டி வந்தனர்.

அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் இவரை அனைவராலும் விரும்பப்படும் அரசியல் தலைவர் என்று குறிப்பிட்டு இருந்தது.

ஹரியானாவில் உள்ள அம்பாலாவில் 1953, பிப்ரவரி 14ல் பிறந்தார். இவரது தந்தை தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.

இவரது பெற்றோர் பாகிஸ்தானின் லாகூரில் இருக்கும் தரம்புராவில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள்.

அம்பாலா கண்டோன்மெண்டில் உள்ள சனாதன் தர்மா கல்லூரியில் சமஸ்கிருதம் மற்றும் அரசியல் பட்டம் முடித்தவர் சுஷ்மா ஸ்வராஜ்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்