காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன்! அமித் ஷா ஆவேசம்

Report Print Kabilan in இந்தியா

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று மக்களவையில் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்து பேசினார்.

காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவது சட்ட மீறல் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியதுடன், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அமித் ஷா ஆவேசம் அடைந்தார்.

அதன் பின்னர் பேசிய அவர், ‘காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன். 370வது பிரிவை மாற்றியமைக்கலாம் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியும் இந்தியாவுக்கு சொந்தமானது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மறந்துவிடாதீர்கள்.

அரசியல் காரணங்களுக்காக காஷ்மீரை இரண்டாகப் பிரிக்கவில்லை. இந்தியாவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் இது. காஷ்மீர் தொடர்பாக சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அனைத்து உரிமையும் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளை மீட்க என் உயிரையும் கொடுக்க தயார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers