காஷ்மீரில் நீடிக்கும் பதட்ட நிலை...! பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

Report Print Kabilan in இந்தியா

காஷ்மீரில் பதட்டம் நீடிக்கும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்து வருகிறது.

காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களை காட்டி, கடந்த வாரம் திடீரென இந்திய அரசு தனது ராணுவப் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியது. முதலில் 10 ஆயிரம் வீரர்களும், பின்னர் 28 ஆயிரம் வீரர்களும் கூடுதலாக அங்கு அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையில், அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, யாத்திரையை ரத்து செய்து, அனைவரையும் உடனே காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டது.

இதேபோல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட அனைத்து வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் வெளியேற உத்தரவிட்டதால், ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. விமான நிறுவனங்கள் சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளன.

இதன் காரணமாக காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, தற்போது மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்து வருகிறது.

இதில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இதன் முடிவுகள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்