கார் விபத்தில் பத்திரிகையாளர் பலி.. ஐஏஎஸ் அதிகாரி அதிரடி கைது!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பத்திரிகையாளர் ஒருவர் கார் விபத்தில் பலியான விவகாரத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்தவர் முகமது பஷீர் (35). இவர் மலையாள நாளிதழ் ஒன்றின் திருவனந்தபுரம் செய்தியாளராக பணியாற்றியவர். இவர் மலப்புரத்தில் உள்ள அருங்காட்சியகம் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, வேகமாக வந்த கார் ஒன்று மோதி ஏற்படுத்திய விபத்தில் பலியானார்.

அதனைத் தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய காரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன் காரில் இருந்ததாகவும், மது போதையில் அவர் தான் காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பொலிசாரிடம் ஸ்ரீராம் காரை தான் ஓட்டவில்லை என்றும், தனது பெண் நண்பர் வாஃபா பெரோஸ்தான் ஓட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், விபத்தை நேரில் பார்த்தவர்கள் ஸ்ரீராம் காரை ஓட்டியதாகவே தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதன் பின்னர், அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வந்த நீதிபதி, ஸ்ரீராமை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், விபத்தில் பலியான பஷீருக்கு அம்மாநில முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முகமது பஷீருக்கு ஜசீலா என்ற மனைவியும், ஜன்னா, ஆஸ்மி என்ற பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்