அரண்மனை போன்ற வீட்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்த 6 பேர்: சிக்கிய கடிதம்!

Report Print Vijay Amburore in இந்தியா

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த இளைஞர் சொந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேரை சுட்டுக்கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தை சேர்ந்தவர் குர்ச்சரன் சிங். இவருடைய மனைவி குர்தீப் கவுர் (70). இந்த தம்பதியினருக்கு மஞ்சீத் சிங் (55) என்கிற மகனும், பிந்தர் கவுர் (50) என்கிற மருமகளும் உள்ளனர்.

இவர்களுடன் மகன் சந்தீப் சிங் (27), மகள் அமன்ஜோத் கவுர் (33) மற்றும் பேரக்குழந்தை மனீத் கவுர் (3) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை வீட்டில் 6 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார் 6 பேர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குர்ச்சரன் சிங்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வீட்டில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், சந்தீப் சிங் கைப்பட எழுதியிருந்த கடிதம் ஒன்றினை கண்டுபிடித்தனர்.

அந்த கடிதத்தில், தங்களுடைய குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை வேறு ஒரு நபருக்கு கொடுக்க குடும்பத்தினர் முடிவெடுத்தது தனக்கு பிடிக்கவில்லை என்றும், அதன் காரணமாகவே தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சகோதரி மற்றும் அவருடைய குழந்தையை துப்பாக்கியால் சுட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய குர்ச்சரன் சிங் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால் பொலிஸார் எந்த விசாரணையும் மேற்கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து உள்ளூர் தலைவர் ஜாக்சீர் சிங் கூறுகையில், கிராமத்தின் நடுவில், அரண்மனை போன்று கட்டப்பட்ட வீட்டில் குர்ச்சரன் சிங் குடும்பத்தினர் மிகுந்த செல்வாக்குடன் வசித்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமாக 25 ஏக்கர் நிலம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்