6வது முறையாக உலக சாம்பியன்.. சாதித்துக்காட்டிய மாற்றுத்திறனாளி தமிழச்சி! குவியும் பாராட்டு

Report Print Kabilan in இந்தியா

உலக சதுரங்க விளையாட்டு போட்டியில் தொடர்ந்து 6வது முறையாகத் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெனிதா ஆண்டோவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தின் திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெனிதா ஆண்டோ. இவர் 3 வயது குழந்தையாக இருக்கும்போதே போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். 90 சதவித உடல் நலக்குறைவால் மாற்றுத்திறனாளியான ஜெனிதா, தனது தந்தையின் உதவியுடன் சக்கர நாற்காலியில் நாட்களை கடக்க துவங்கினார்.

ஆனால், தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாத ஜெனிதா, சதுரங்க விளையாட்டில் தனது கவனத்தை செலுத்தினார். அதன் விளைவாக ஒரு சாம்பியனாக உருவெடுத்த அவர், இந்தியாவை தாண்டி சர்வதேச அளவில் பதக்கங்களை குவிக்க ஆரம்பித்தார்.

குறிப்பாக, தங்கப் பதக்கங்களை குவித்து, தங்க மங்கையாகவே மாறினார். இந்நிலையில், ஸ்லோவாக்கியா நாட்டில் 19வது உலக மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கடந்த ஜூன் 28ஆம் திகதியில் இருந்து ஜூலை 6ஆம் திகதி வரை நடைபெற்ற இதில், பெண்களுக்கான சதுரங்க விளையாட்டு பிரிவில் ஜெனிதா ஆண்டோ கலந்துகொண்டார்.

தனது சிறப்பான ஆட்டத்தினால் தங்கப்பதக்கம் வென்ற அவர், தொடர்ந்து 6வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் விமானம் மூலம் சொந்த ஊரான திருச்சிக்கு வந்த அவரை, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனை மற்றும் சமூக ஆர்வலர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

குறிப்பாக, இளைஞர்கள் பலர் நீண்ட தூரம் வரிசையில் நின்று, கைதட்டி வரவேற்றதுடன் மாலை அணிவித்து, பூச்செண்டு மற்றும் சால்வை அணிவித்து ஜெனிதாவை வாழ்த்தினர். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெனிதா கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் மாற்றுத்திறனாளிகளுக்காக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு நடைபெற்ற 19வது உலக மாற்றுத் திறனாளிகளுக்கான சதுரங்க போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 44 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த முறை எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய வீரர்கள் கூடுதலாக கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 5 வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தப் போட்டியில் பெண்களுக்கான சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளேன். உலகக்கோப்பை போட்டியில் ஆறாவது முறையாக நான் பெற்றுள்ள தங்கப்பதக்கம் இது. இந்த வெற்றிக்காக பாடுபட்ட எனது தந்தை, உதவிய எனது பயிற்சியாளர் சுந்தர்ராஜன், நண்பர்கள், உறவினர்கள், சதுரங்க விளையாட்டு கூட்டமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

வரும் 2020ஆம் ஆண்டில் நடக்க இருக்கும், ஆசிய கிராண்ட் மாஸ்டர் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது தான் என் வாழ்நாள் லட்சியம். அதற்காக தொடர்ந்து பயிற்சி எடுக்க உள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...