சீருடையில் இருக்கும்போது அடிப்பார்கள் என்று நினைக்கவில்லை! கண்ணீர் விட்ட பெண் அதிகாரி

Report Print Kabilan in இந்தியா

சீருடையில் இருக்கும் தன்னை தாக்குவார்கள் என்று கற்பனை கூட செய்யவில்லை என்று தாக்குதலுக்குள்ளான தெலுங்கானா வனத்துறை அதிகாரி அனிதா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில வனத்துறை அதிகாரியான அனிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிர்பூர் மண்டல் பகுதியில் உள்ள சரசலா கிராமத்திற்கு சென்றார். அரசின் மரம் நடும் திட்டத்தின் கீழ், அங்கு சில இடங்களில் மரங்களை நட அரசு நிலங்களை அவர் தெரிவு செய்துள்ளார்.

ஆனால், அதற்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், எம்.எல்.ஏவின் சகோதரர் கோனரு கிருஷ்ணா ராவ் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து, வனத்துறை அதிகாரி அனிதா மற்றும் பிற அதிகாரிகளை சரமாரியாக தாக்கினார்.

கம்பால் கடுமையான தாக்குதலுக்குள்ளான அனிதா உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அதிகாரியை தாக்கிய கோனரு கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து திரும்பிய அனிதா, தாக்கப்பட்டது குறித்து கூறுகையில்,

‘நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். யாருமே கல்வியறிவு பெற்றிராத குடும்பத்தில் இருந்து படித்து, முன்னேறி இருக்கிறேன். பெண் என்றும் பாராமல் என்னை இப்படி தாக்குவார்கள் என்று நான் நினைக்கவில்லை. சீருடையில் இருக்கும்போது என்னை அடிப்பார்கள் என்று நினைக்கவில்லை’ என கண்ணீருடன் தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்