தமிழகத்தில் தங்கிய இரண்டு வெளிநாட்டவருக்கு சொகுசு வாழ்க்கை கிடைத்தது எப்படி? அதிரவைக்கும் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பிரபல சிறுநீரக மையத்தின் பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கி, பொதுமக்கள் பலரிடம் பண மோசடி செய்த வெளிநாட்டினர் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஈரோட்டில் உள்ளது கல்யாணி கிட்னிகேர் என்ற சிறுநீரக மையம். இந்த மையத்திற்கு அண்மையில் சென்ற ஐதராபாத் பெண் ஒருவர், ஒரு சிறுநீரகத்திற்கு 3 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்ற தங்களது மையத்தின் அறிவிப்பை பார்த்து வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தனது குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால், இரு சிறுநீரகங்களையும் அளிக்க உள்ளதாகவும், இதற்காக 15 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி விட்டதாகவும் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுபோன்று எந்த விளம்பரமும் செய்யவில்லை என்று அந்தப் பெண்ணிடம் விளக்கம் அளித்த மையத்தின் நிர்வாகம், விபரீதத்தை உணர்ந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தது.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணையை தொடங்கினர்.

விசாரணை நடந்து கொண்டிருந்த வேளையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறுநீரகங்கள் விற்பனை குறித்து பல்வேறு மாநிலங்களில் இருந்து அந்த சிறுநீரக மையத்தைத் தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தனர்.

இதை அடுத்து சிறுநீரக மையத்தின் போலி பேஸ்புக் பக்கத்தை முடக்கிய பொலிசார், மோசடி செய்த நபர்கள், வாட்ஸ் ஆப் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களிடம் கொடுத்த வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தனர்.

மேலும் மோசடி நபர்களின் செல்போன் சிக்னல்களையும் ஆராய்ந்தனர். செல்போன் சிக்னலானது பெங்களூருவைக் காட்டவே அங்கு விரைந்த பொலிசார் சிறுநீரக விற்பனை மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டினர் இருவரை சுற்றிவளைத்துக் கைது செய்தது.

அவர்கள், கொலின் ஸ்டேன்டி, ஒகோவா ஸ்டீபன் ஃபிராங் என விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஏராளமான வங்கிக் கணக்கு புத்தகங்கள், ஏடிஎம் கார்டுகள், செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மோசடி செய்த பணத்தில் பெங்களூருவில் அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கூறிய பொலிசார், கைதான இருவரும் கல்வி பயில்வதற்கான விசாவில், பெங்களூருவில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்