தமிழகத்தில் தன்னதானே கத்தியால் குத்தி கொண்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரையை சேர்ந்தவர் மணிகண்டபிரபு (31). இவர் மதுரையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி திருமலாதேவி (29). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
மணிகண்டபிரபு கடந்த 2011-ம் ஆண்டு ஆயுதப்படையில் பணிக்கு சேர்ந்தார். நேற்று மணிகண்ட பிரபு வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து அவருடைய மனைவி வீட்டுக்கு வந்தார்.
வீட்டின் கதவை திருமலா தேவி திறந்து பார்த்த போது அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மணிகண்ட பிரபு நெஞ்சில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதைப்பார்த்ததும் அவர் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வீட்டு்க்குள் சென்று மணிகண்டபிரபு இறந்து கிடந்ததை பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மணிகண்டபிரபுவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மணிகண்டபிரபு பணிச்சுமை காரணமாக தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொல செய்து கொண்டதாக முதலில் சந்தேகிக்கப்பட்டது.
அதே நேரத்தில் அவர் மர்ம மனிதனால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் பரவியது.
எனவே இந்த சம்பவத்தில் துப்புதுலங்க பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அவருடன் பணியாற்றி வந்த அதிகாரிகளிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
குடும்ப பிரச்சினையால் மணிகண்டபிரபுவுக்கு நெருக்கடி ஏதும் இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.