இறந்து ஒரு மாதத்திற்கு பின்னர் புதைக்கப்பட்ட பெண்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் கல்லறைத் தோட்டத்தால் நீராதாரம் அசுத்தமாவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால், பெண் ஒருவர் இறந்து ஒரு மாதத்திற்கு பின்னர் புதைக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்னம்மா என்பவர் மார்த்தோமா ஆலயத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். 75 வயதான இவர் கடந்த மே 13ம் திகதி வயது மூப்பு காரணமாக காலமானார்.

அவர் தனது மகனைப் புதைத்த இடத்தில்தான் தன்னையும் புதைக்கவேண்டும் என உறவினர்களிடம் முன்பு கூறியுள்ளார். இதன்படி அவரைப் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள், கல்லறைத் தோட்டத்தை புதுப்பித்து, நீராதாரத்தை பாதுகாக்க வழிவகை செய்யாமல் அவரை அங்கு புதைக்கக்கூடாது என போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கல்லறைத் தோட்டமானது அதற்கு பின்னர் இதுவரை சரியான பராமரிப்பு ஏதும் முன்னெடுக்கப்படவில்லை என அப்பகுதியில் உள்ள 28 குடும்பங்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் இந்த கல்லறைத் தோட்டத்தால் அச்சத்துடனே வாழவேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, உயர் நீதிமன்றத்தை நாடிய அப்பகுதி மக்கள், தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், ஒருமாத காலத்திற்கு பின்னர் அன்னம்மாவின் உடல் குறித்த கல்லறையில் அவர் விருப்பப்படியே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்