10 நாட்களில் கொத்தாக மாயமான 546 பேர்: கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் 500-க்கும் அதிகமானோர் மாயமானதாக வெளியான தகவல் நாடு முழுக்க பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வெளியாகும் தனியார் பத்திரிகை ஒன்றே குறித்த தகவலை முதன்முறையாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.

மாயமானவர்களில் 2 வயது முதல் 80 வயதுவரையானவர் இருப்பதாக சுட்டிக்காட்டும் அந்த செய்தி, பெரும்பாலும் ஐதராபாத் நகரின் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களே இவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஜூன் 1-ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையே அதிகமான புகார்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது. மேலும், ஐதராபாத் பொலிசாரின் மெத்தனம் குறித்தும் அந்த செய்தியில் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியானதும் சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பலர் தெலுங்கானா மாநிலம் பாதுகாப்பானது தானா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.

அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி நாள் ஒன்றுக்கு சராசரியாக 54 பேர் மாயமானதாக தெரியவந்துள்ளது.

ஆனால் இந்த தகவல் ஒன்றும் அச்சுறுத்தும்வகையில் இல்லை எனவும், தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தமட்டில் கோடை காலத்தில் இதுபோன்ற மாயமாகும் தகவல் வெளியாவது வாடிக்கை என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 16,134 பேர் மாயமானதாக அரசு தரவுகள் சுட்டிக்காட்டுவதாகவும், இது ஜூன் வரையான கோடை காலத்தில் அதிகமாக நடப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், பாடசாலை தேர்வு பயம், பாடசாலை திறப்பதால் ஏற்படும் அச்சம் உள்ளிட்ட காரணங்களே சிறார்கள் மாயமாக காரணம் என கூறப்படுகிறது.

இச்சம்பவங்களில் உடனடியாக பெற்றோர்கள் பொலிசாரை அணுகி புகார் அளிக்கின்றனர், ஆனால் மாயமான சிறார்கள் சில நாட்கள் கடந்த பின்னர் குடியிருப்புக்கு திரும்பிய பின்னர் அந்த தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்துவதில்லை.

இந்த ஆண்டு ஜூன் 10 ஆம் திகதிவரை மாயமான 540 பேரில் பொலிசார் 222 பேரின் தகவலை திரட்டி அவர்களை மீட்டுள்ளனர்.

இதேபோன்று கடந்த 2018 ஆம் ஆண்டு மாயமானவர்களின் 85 சதவிகித புகார்களும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்