நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி பெற்ற திருமாவளவன்... நான் யாருக்கும் கேடு நினைத்ததில்லை என உருக்கம்

Report Print Raju Raju in இந்தியா

மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற தொல்.திருமாவளவன் தொகுதி மக்களுக்கு இந்த வெற்றியை காணிக்கையாக்குவதாக கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

மற்ற வேட்பாளர்களின் வெற்றி நிலவரம் முன்னதாகவே தெரியவந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னரே திருமாவளவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் சந்திரசேகர் அவருக்கு கடுமையாக போட்டி கொடுத்தார்.

இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில் இறுதியாக 3218 என்ற குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே திருமாவளவன் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்றபின்னர் பேசிய திருமாவளவன், இந்த வெற்றியைச் சிதம்பரம் தொகுதி மக்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.

யாருக்கும் நான் கேடு நினைத்ததில்லை. அறம் வெல்லும். கடுமையான போட்டிக்கு இடையில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எதிர் வேட்பாளருக்கு எதிராக ஒரு ஓட்டு அதிகம் பெற்றாலே வெற்றி பெற்றதாகிவிடும். எனக்கு ஆகக்கூடுதலாக 3218 ஓட்டு எனக்குக் கிடைத்துள்ளது. இந்த அளவு குறைவாக இருந்தாலும் இது மகத்தான வெற்றி.

அகில இந்திய அளவில் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றாலும் தமிழகம் மற்றும் கேரளாவில் அவர்களின் ஜம்பம் எடுபடவில்லை.

அ.தி.மு.க கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்ததுமே அது தோற்றுப் போய் விடும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் அறிக்கை வெளியிட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்